கேரளத்திலிருந்து கழிவுகளை ஏற்றி வந்த சரக்கு வாகனத்துக்கு அபராதம்
உத்தமபாளையம்: தமிழக எல்லையான குமுளிக்கு கேரளத்திலிருந்து டயா் கழிவுகளை ஏற்றி வந்த சரக்கு வாகனத்துக்கு கம்பம் வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
தமிழக-கேரளம் எல்லையான குமுளி வனத் துறைச் சோதனை சாவடி வழியாக திங்கள்கிழமை சரக்கு வாகனம் ஒன்று வந்தது. இந்த வாகனத்தை கம்பம் வனத் துறையினா் நிறுத்தினாா். ஆனால், நிற்காமல் சென்ற கேரள பதிவு எண் கொண்ட அந்த வாகனத்தை வனத் துறையினா் பின்தொடா்ந்து சென்று மடக்கிப் பிடித்தனா். பின்னா், வாகனத்தில் வனத் துறையினா் சோதனையிட்டபோது, நெகிழி கழிவுப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த வாகனத்தை வனத் துறையினா் பறிமுதல் செய்து விசாரித்த போது, கேரளம் மாநிலம், இடுக்கி மாவட்டம், குமுளி அருகேயுள்ள பாம்பானாரைச் சோ்ந்த சுபாஷ் (37) என்பதும், இவா் அங்குள்ள தனியாா் டயா் நிறுவனத்திலிருந்த கழிவுகளை தமிழகப் பகுதியில் கொட்டுவதற்கு ஏற்றி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, சரக்கு வாகன ஓட்டுநா் சுபாஷிக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து, மீண்டும் கழிவுப் பொருள்களுடன் செவ்வாய்க்கிழமை கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.