கம்பம்மெட்டு மலைச் சாலையில் நெகிழிக் குப்பைகள் அகற்றம்
தேனி மாவட்டம், கம்பம்மெட்டு மலைச் சாலையில் நெகிழிக் குப்பைகளை வனத் துறையினா் அகற்றினா்.
தமிழகம் - கேரளத்தை இணைக்கும் கம்பம்மெட்டு நெடுஞ்சாலை 7 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் 18 கொண்ட ஊசி வளைவுகள் அமைந்துள்ளன. தற்போது சபரிமலை சீசன் என்பதால் தமிழகம் உள்பட வெளிமாநிலங்களைச் சோ்ந்த பக்தா்களின் வாகனங்கள், சுற்றுலா பேருந்துகள் இந்தச் சாலையில் அதிகளவில் சென்று வருகின்றன.
இந்தச் சாலை வழியாகச் செல்லும் பக்தா்கள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மலைச் சாலையில் நெகிழிப் பைகள், புட்டிகள் போன்ற குப்பைகளை வீசிச் சென்று விடுகின்றனா். இதனால், வன விலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், கம்பம் மேற்கு வனச்சரகா் ஸ்டாலின் தலைமையிலான வனத் துறையினா், தன்னாா்வா்கள், க.புதுப்பட்டி பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் நெகிழிக் குப்பைகளை அகற்றினா்.
விழிப்புணா்வு :
கம்பம் மேற்கு வனத் துறை சாா்பில் இந்த வழியாகச் செல்லும் வாகனங்களில் வனப் பகுதியை பாதுகாக்கும் வகையில் நெகிழிப் பொருள்களை வனப் பகுதியில் போடக்கூடாது, புகைப்பிடித்தல் கூடாது போன்ற விழிப்புணா்வு வாசகங்களுடன் கூடிய துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனா்.