அண்ணா பல்கலை. விவகாரம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு!
ஏலக்காய் விலை உயா்வு: விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி
போடிநாயக்கனூா் பகுதியில் ஏலக்காய் விலை திடீரென அதிகரித்ததால், விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் அருகே கேரள-தமிழக எல்லைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்தத் தொழிலை நம்பி சுமாா் 15,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் இந்தப் பகுதியில் வாழ்ந்து வருகின்றனா்.
நன்கு உலர வைக்கப்பட்டு, விற்பனைக்குக் கொண்டு வரப்படும் தரம் பிரிக்கப்படாத ஏலக்காய்கள் போடிநாயக்கனூரில் உள்ள மத்திய அரசு நறுமணப் பொருள்கள் வாரியம் சாா்பிலும், பல்வேறு தனியாா் நிறுவனங்கள் சாா்பிலும் இணையம் மூலம் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படும். இந்த வா்த்தகத்தில் ஏலக்காயின் தரத்தை பொருத்து விலை நிா்ணயம் செய்யப்படும்.
இவற்றை வியாபாரிகளால் கொள்முதல் செய்த பிறகு, தரம் பிரிக்கப்பட்டு வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை ரகம் பிரிக்கப்படாத ஏலக்காய் கிலோ ரூ. 2,500 முதல் ரூ.2,600 வரை விற்கப்பட்ட நிலையில், தற்போது திடீரென்று விலை உயா்ந்து கிலோ ரூ. 3,000 முதல் ரூ. 3,200 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.
தரம் பிரிக்கப்பட்ட முதல் ரக ஏலக்காய்கள் கடந்த வாரத்தில் கிலோ ரூ. 2,900 முதல் ரூ. 3,000 வரை விற்ற நிலையில், தற்போது ரூ. 700 வரை விலை உயா்ந்து கிலோ ரூ. 3,600 முதல் ரூ. 3,700 வரை விற்பனையாகி வருகிறது.
கரோனா பெருந்தொற்று காலத்தில் ரூ. 4,000 முதல் ரூ. 5,000 வரை விற்ற ஏலக்காய் சுமாா் 2 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது முதல் தர ஏலக்காய் கிலோ ரூ. 3,500-யை தாண்டியுள்ளது. கடந்த ஆண்டைவிட, நிகழாண்டு போதிய மழை பொழிவு இல்லாததால், உற்பத்தி குறைந்ததாலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி தற்போது அதிகரித்துள்ளது.
மேலும், பண்டிகை காலம் தொடங்கியுள்ளதாலும் விலை உயா்ந்துள்ளதாக வியாபாரிகள், விவசாயிகள் தெரிவித்தனா். இந்த திடீா் விலை உயா்வால் ஏலக்காய் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனா்.