மாநில கல்விக் கொள்கையில் நெகிழ்வுத் தன்மையை உருவாக்குவோம்: அன்பில் மகேஸ்
தேர்தல் வெற்றிக்கு ஜம்முவில் இருந்துக்கூட வாக்காளர்களைச் சேர்ப்போம்: கேரள பாஜக துணைத் தலைவர்!
வாக்குத் திருட்டு விவகாரம் நாடு முழுவதும் மிகப் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள நிலையில், தேர்தலில் வெற்றி பெறுவதற்கு நாங்கள் வாக்காளர்களை இணைப்போம் என கேரள பாஜக துணைத் தலைவர் பி.கோபாலகிருஷ்ணன் பேசியுள்ளார்.
2024-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், கேரளத்தின் திருச்சூர் தொகுதியில் மட்டும் பாஜக வெற்றி பெற்று, அம்மாநிலத்தைச் சேர்ந்த முதல் பாஜக எம்.பியாக நடிகர் சுரேஷ் கோபி தேர்வானார்.
வாக்குத் திருட்டு விவகாரம் நாடு முழுவதும் பெரும் பேசுப்பொருளாகியுள்ள சூழலில், திருச்சூர் தொகுதியில் சட்டவிரோதமாக பாஜகவுக்கு ஆதரவாக வாக்காளர்கள் இணைக்கப்பட்டனர் எனும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், செய்தியாளர்களுடன் நேற்று (ஆக.22) பேசிய கேரள பாஜக துணைத் தலைவர் பி.கோபாலகிருஷ்ணன், தேர்தலில் வெற்றி பெறுவதற்கு நாங்கள் விரிவாக வாக்காளர்களைச் சேர்ப்போம் எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது:
“நாங்கள் வெற்றி பெற வேண்டும் எனக் கருதும் தொகுதிகளில், வாக்காளர்களை விரிவாகச் சேர்ப்போம். இதற்காக, ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்தவர்களைக் கூட ஓராண்டிற்கு அந்தத் தொகுதியில் தங்கவைத்து பின்னர் அவர்களை வாக்காளர் பட்டியலில் இணைப்போம். அதை நாங்கள் தொடர்ந்து செய்வோம்
கேரளத்தில் போட்டியிடும் நான் வெற்றியடைய வேண்டுமென காஷ்மீரிலுள்ள யாரேனும் நினைத்தால் என்ன செய்வது? அதனால், அவர்கள் இங்கு வந்து வாக்களிக்க முடியும்” எனப் பேசியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கேரளத்தில் வரும் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், இதுபோன்று வாக்காளர்களைச் சேர்க்க ஏதேனும் திட்டமுள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், அதுபற்றி பின்னர் முடிவுச் செய்யப்படும் எனக் கூறியுள்ளார்.
இதனால், வாக்குத் திருட்டு எனும் குற்றச்சாட்டை கேரள பாஜக ஒப்புக்கொள்கின்றதா? என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
முன்னதாக, 2024 மக்களவைத் தேர்தலில், திருச்சூர் தொகுதியில் சட்டவிரோதமான முறையில் வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக, அம்மாநிலத்தின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிக் கூட்டணிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: உங்களை ஏன் பணியமர்த்த வேண்டும்? நேர்காணல் கேள்விகளுக்கு பதில் சொல்லும் பில் கேட்ஸ்