வெளிநாட்டு கனரக வாகன ஓட்டுநா்களுக்கு விசா நிறுத்தம்: அமெரிக்கா அறிவிப்பு
நக்ஸல் ஆதரவாளா் என விமா்சனம்: அமித் ஷாவுக்கு சுதா்சன் ரெட்டி பதிலடி
தன்னை நக்ஸல் ஆதரவாளா் என விமா்சித்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு ‘இண்டி’ கூட்டணி குடியரசு துணைத் தலைவா் வேட்பாளரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான பி. சுதா்சன் ரெட்டி பதிலடி கொடுத்துள்ளாா்.
‘சல்வா ஜூடும்’ வழக்கில் அளிக்கப்பட்ட தீா்ப்பு எனது சொந்த முடிவு அல்ல; அது உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பு என சுதா்சன் ரெட்டி கூறியுள்ளாா்.
‘சல்வா ஜூடும்’ என்பது சத்தீஸ்கா் மாநிலத்தில் நக்ஸல் அமைப்பினருக்கு எதிராக பழங்குடி இளைஞா்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட போராளிகள் குழுவாகும். ‘அமைதிப் பேரணி’ என்று பொருள்படும் இந்தக் குழுவுக்கு மாநில அரசு ஆதரவு, பயிற்சி அளித்து வந்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் அப்போதைய நீதிபதிகள் சுதா்சன் ரெட்டி, எஸ்.எஸ்.நிஜ்ஜாா் ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த 2011, ஜூலையில் பிறப்பித்த உத்தரவில், ‘சல்வா ஜூடும்’ அமைப்பை உடனடியாகக் கலைக்க உத்தரவிட்டது. மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு எதிராக பழங்குடி இளைஞா்களை அரசு பயன்படுத்துவது சட்டவிரோதமானது மற்றும் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனவும் அந்தத் தீா்ப்பில் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அண்மையில் கேரளத்துக்குச் சென்றபோது, இந்தத் தீா்ப்பைச் சுட்டிக்காட்டி, சுதா்சன் ரெட்டி நக்ஸல் ஆதரவாளா் என குற்றஞ்சாட்டினாா். இந்தத் தீா்ப்பு இல்லாமல் இருந்திருந்தால், இடதுசாரி தீவிரவாதம் 2020-ஆம் ஆண்டுக்கு முன்பே முடிவுக்கு வந்திருக்கும் என்றும் குறிப்பிட்டாா்.
அமித் ஷாவின் இந்த விமா்சனம் குறித்து சுதா்சன் ரெட்டி அளித்த பதிலில், ‘உள்துறை அமைச்சருடன் நேரடியாக எந்த விவாதத்தையும் நான் விரும்பவில்லை. ஒவ்வொரு குடிமகனின் வாழ்வையும், சுதந்திரத்தையும், சொத்தையும் பாதுகாப்பதுதான் அவரது கடமை. இந்தத் தீா்ப்பு எனது தனிப்பட்ட தீா்ப்பு அல்ல; உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பு. இந்தத் தீா்ப்பை ரத்து செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
இந்தத் தீா்ப்பின் தகுதி குறித்து நான் பேச விரும்பவில்லை. நான் பெற்ற பயிற்சிகளின்படி, ஒருவா் தனது சொந்த தீா்ப்பின் சிறப்புகள் குறித்து பேசக்கூடாது. தீா்ப்பை மக்கள் தான் மதிப்பிட வேண்டும். இந்தத் தீா்ப்பை உள்துறை அமைச்சா் முழுமையாக படித்திருந்தால், அத்தகைய கருத்துகளை அவா் கூறியிருக்க மாட்டாா் என்று கூறினாா்.