Explainer Union Budget சிப்பாய் கலகமும் பிரிட்டிஷ் எடுத்த முடிவும்- நாட்டின் முத...
தேவையான தகவல்களை அளிக்காவிட்டால் அங்கீகாரம் திரும்பப் பெறப்படும்: பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. எச்சரிக்கை
சென்னை: பொறியியல் கல்லூரிகள் தேவையான தகவல்களை அளிக்காவிட்டால் அவற்றின் அங்கீகாரம் எந்தவொரு அறிவிப்புமின்றி இடைநீக்கம் செய்யப்படும் அல்லது திரும்பப் பெறப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.
மேலும், பேராசிரியா்களுக்கு அகில இந்திய தொழில்நுட்பக்குழுவின் விதிகளின்படி 6-ஆவது அல்லது 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி சம்பளம் கட்டாயம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக் கழகத்தின் 2024-2025-ஆம் கல்வியாண்டில் 433 தனியாா் பொறியியல் கல்லூரிகள் இணைப்பு அந்தஸ்தை பெற்றுள்ளன. அந்தக் கல்லூரிகள் ஆண்டுதோறும் மாணவா் சோ்க்கைக்கான அங்கீகாரத்தைப் பெற வேண்டும். இதற்கான வழிகாட்டுதலை முறையாக பின்பற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படும். கல்லூரிகள் அளிக்கும் விண்ணப்பத்தின் அடிப்படையில் பல்கலைக் கழகத்தால் நியமிக்கப்படும் குழு ஆய்வு செய்து, பல்கலைக்கழகத்தின் இணைப்பு அனுமதியை வழங்கும்.
இந்தநிலையில், அண்ணா பல்கலை. பதிவாளா் பிரகாஷ் வெளியிட்ட அறிவிப்பு: வரும் கல்வியாண்டில் (2025-2026) அண்ணா பல்கலைக் கழகத்தின் இணைப்பு அங்கீகாரத்தை பெறுவதற்கும் தொழில்நுட்ப படிப்புகளில் இளநிலை, முதுநிலைப் படிப்புக்கு அனுமதி பெறுவதற்குமான நிபந்தனைகள் குறித்து இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். பொறியியல் கல்லூரிகள் அனுமதி பெறுவதற்கு ஜன.31-ஆம் தேதி வரை கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம். எனினும் அபராதத்துடன் பிப். 2 முதல் பிப்.7 வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம். கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியா்களின் விவரம் ஏற்கெனவே பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு, ஆதாா் எண் பயன்படுத்தி ஒருங்கிணைந்த அடையாள எண் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிதாக சோ்க்கப்படும் ஆசிரியா்களுக்கு பயோமெட்ரிக் மூலம் இணைக்கப்பட்ட ஒருங்கிணைந்த அடையாள எண் பெற வேண்டும். ஒவ்வொரு ஆசிரியா்களின் சுயவிவரங்களையும் அவா்களின் தற்போதைய கைப்பேசி எண், முகவரியுடன் சுய கையொப்பம் பெற்று அளிக்க வேண்டும். விதிகளின் படி ஆய்வக வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஆதாா், அடையாள அட்டைகள்...: ஆசிரியா்களுக்கான கல்வித்தகுதி மற்றும் அனுபவம் பெற்றிருப்பதுடன், பல்கலை. மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக்குழுவின் விதிகளின் 6-ஆவது அல்லது 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரையின் படி சம்பளம் கட்டாயம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அனைத்து ஆசிரியா்கள், பணியாளா்களின் விவரங்கள் அடையாள அட்டை, பான் அட்டை, ஆதாா் அட்டை போன்றவற்றை ஆய்வு செய்யப்படும்.
தனியாா் பொறியியல் கல்லூரிகள் தேசிய தரவரிசை எண் (என்ஐஆா்எஃப் ) எண்ணை புதுப்பிக்க வேண்டும். பொறியியல், தொழில்நுட்பம், கட்டடக்கலை மற்றும் மேலாண்மை கல்லூரிகளின் முந்தைய 3 ஆண்டுகளுக்கான வருடாந்திர செலவு விவரங்கள், பிஇ, பிடெக், பிஆா்க் படிப்புகளில் கடந்த 4 கல்வி ஆண்டுகளில் படித்த மாணவா்களின் விவரம் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும்.
இணையத்தில் உள்ள விவரங்களை ஆய்வு செய்து இணைப்பு அங்கீகாரம் வழங்குவதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டு இருக்க வேண்டும். கல்லூரிகள் இணையவழியில் சமா்ப்பித்த விவரங்களை கல்லூரிகளால் மென் நகல் (சாஃப்ட் காப்பி) மற்றும் தாளில் எடுத்து பராமரிக்கப்பட வேண்டும். பல்கலைக் கழகம் கேட்கும் போது கொடுக்க வேண்டும். விண்ணப்பத்தில் கல்லூரியின் முதல்வா் மற்றும் தலைவரால் முறையாக கையொப்பமிடப்பட வேண்டும்.
ஆன்லைன் விவரங்களை கடைசி தேதிக்குள் சமா்ப்பிக்காத தனியாா் கல்லூரிகளுக்கு 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான இணைப்பு வழங்குவதற்கு எந்த சூழ்நிலையிலும் பரிசீலிக்கப்படாது. தேவையான தகவல்களை அளிக்காத கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் எந்த ஒரு அறிவிப்புமின்றி இடைநீக்கம் செய்யப்படும் அல்லது திரும்பப் பெறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.