``தோல்வி பயத்தில், காய்கறி விற்பதுபோல் கூவிக்கூவி உறுப்பினர் சேர்க்கிறது திமுக'' - அண்ணாமலை சாடல்
திருப்பூரில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதைத் தொடர்ந்து, அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், "முன்னாள் முதல்வர் காமராஜர் குறித்து தொடக்க காலத்தில் திமுக-வின் முரசொலி நாளிதழில் அசிங்கப்படுத்தி கார்ட்டூன் மற்றும் செய்தி வெளியிட்டுள்ளனர். தற்போது, காமராஜர் குறித்து அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பேசியது குறித்து எதிர்ப்புகள் எழும்பி உள்ளது.

ஆனால், அதை பெரிதுபடுத்த வேண்டாமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகிறார். இதுகுறித்து கேள்வி கேட்க வேண்டிய இடத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் வாய் கூட திறக்கவில்லை. அந்தளவுக்கு காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் செயலிழந்துள்ளது. எப்படியாவது திமுக கூட்டணியில் நீடித்தால்போதும் என்ற நிலைக்கு காங்கிரஸ் கட்சி சென்றுவிட்டது.
திமுக ஆட்சியில் மக்கள் காவல் துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். அதற்கு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பழக்கங்கள் அதிகரித்துள்ளதே சாட்சியாக இருக்கிறது.
திமுக-வில் உறுப்பினராக சேர்ந்தால் மட்டும்தான் அரசு கொடுக்கும் 1000 ரூபாய் உரிமைத் தொகை கிடைக்கும் என்று மக்களுக்குப் பயத்தை ஏற்படுத்தி சேர்க்கின்றனர்.
5 முறை ஆட்சியில் இருந்த கட்சி காய்கறி வியாபாரம் செய்வதுபோல கூவிக்கூவி உறுப்பினர்களை சேர்த்து வருகிறது. இதிலிருந்தே அவர்களின் தோல்வி பயம் தெரிகிறது." என்றார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், "மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் நிலைமைதான் தமிழகத்தில் உள்ள காவலர்களின் நிலைமையாக உள்ளது. அவரின் குற்றச்சாட்டு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர குற்றஞ்சொல்லியதற்காக டிஎஸ்பி சுந்தரேசன் மீது நடவடிக்கை எடுக்க கூடாது. காமராஜர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் இருக்கிறதா? இல்லையா என்றுகூட தெரியவில்லை. அப்படியொரு கட்சி தமிழ்நாட்டில் இருப்பதாக தெரியவில்லை" என்றார்.