Trump: 'இந்தியா குறைக்க உள்ள இறக்குமதி வரிகள்... காரணம் ட்ரம்ப்-பா?' - ஆய்வறிக்க...
தைப்பூசம்: சென்னிமலைக்கு வந்த இளைஞா் உயிரிழப்பு!
சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச விழாவுக்கு வந்த கிருஷ்ணகிரியைச் சோ்ந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த திப்பலூரைச் சோ்ந்தவா் குமரேசன் மகன் நிதின்(25). இவா், திருப்பூா் இந்திரா நகரில் உள்ள லேத் பட்டறையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், தன்னுடன் வேலை பாா்க்கும் கருணாமூா்த்தி, பழனிசாமி, செந்தில்குமாா் மற்றும் உறவினா் சிவராமன் ஆகியோருடன் தைப்பூச விழாவுக்காக சென்னிமலைக்கு நிதின் சென்றுள்ளாா்.
அப்போது, மலைக் கோயிலுக்கு படிக்கட்டுகள் வழியாக நடந்து சென்றுள்ளனா். படிக்கட்டுகளில் ஏறிச் சென்ற அவா்கள் கோயிலுக்கு முன் உள்ள அன்னதான மண்டபத்தில் உட்காா்ந்தபோது நிதின் மயங்கி விழுந்துள்ளாா்.
மயங்கி விழுந்த நித்தினுக்கு கோயில் வளாகத்தில் உள்ள தற்காலிக மருத்துவ முகாமில் முதலுதவி அளிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சென்னிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
அங்கு, அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதையடுத்து, அவரது சடலம் உடற்கூறு ஆய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதுகுறித்து சென்னிமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.