தைப்பூசம்: தினமும் இரவு வடபழனி முருகன் கோவிலில் பூஜை; வீட்டிலிருந்தே பால்குடம்; நெகிழும் நடிகை தீபா
நாளை தைப்பூசத் திருநாள். முருகன் ஞானப்பழத்திற்காக அவரது பெற்றோருடன் கோபித்துக் கொண்டு பழனி மலையில் குடியேறிய நாளே இந்த நாள் என்று ஒரு சாராரும், அசுரர்களை வெல்வதற்காக முருகன் அவரது அன்னையிடமிருந்து ஞான வேலை வாங்கிய நாள் இது என்று சிலரும் கூறுகின்றனர்.
இந்த நிலையில் சீரியல் நடிகையும் தீவிர முருக பக்தையுமான தீபாவிடம் பேசினோம்.
திருச்சி அருகே ஒரு கிராமத்தில் சில மாதங்களுக்கு முன் முருகனுக்குக் கோவில் எழுப்பிய இவரிடம் தைப்பூசம் குறித்துக் கேட்டதும் உற்சாகமாகி விட்டார்..
''என் வாழ்க்கையில் எல்லாமே முருகன் சொல்படிதான் நடக்குதுனு நம்பறேன். முருகனைப் பார்க்கணும் போல இருந்தா உடனே அறுபடை வீடுகளுக்கோ அல்லது முருகன் குடியிருக்கிற வேறு தலங்களுக்கோ கிளம்பிப் போயிடுவேன். அதேபோல ஏதாவது சிக்கல், கஷ்டம்னு சூழ்ந்தாலும் அவன் காலடிக்குப் போயிடுவேன். அங்க ரெண்டு, மூணு நாள் தங்கியிருந்துட்டு வந்துட்டாலே பாதிப் பிரச்னை தீர்ந்திடும். இதை என் அனுபவப் பூர்வமா உணர்ந்திருக்கேன்.
தொட்டியம் பக்கத்துல ஏலூர்பட்டிங்கிற கிராமத்துல சுப்ரமணிக்கு சன்னதி எழும்புனதும் முருகன் சொல்படி நடந்ததுதான். சுமார் ஆறு மாசத்துக்கு முன்னாடி நடந்த அந்தக் கோவில் கும்பாபிஷேகத்துக்குப் பிறகு என் வாழ்க்கையில எவ்வளவோ நல்ல விஷயம் நடந்தன. தனிப்பட்ட வாழ்க்கையில பெரிய பிரச்னை சுத்தியிருந்த அந்தச் சூழல் இப்ப காணாமப் போயிடுச்சு.
அதைச் செஞ்சது முருகனைத் தாண்டி வேற யாரா இருக்க முடியும்? அந்தக் கும்பாபிஷேகம் முடிஞ்சதுல இருந்தே வடபழனி முருகன் கோவில்ல தினமும் இரவு நடைசாத்தறதுக்கு முன்னாடியான பள்ளியறை பூஜையில கலந்துக்கத் தொடங்கினேன். ஆறு மாசமா தினமும் ராத்திரி வடபழனி கோவில்ல ஒரு மணி நேரம் அந்தப் பூஜையில கலந்துகிட்டு வர்றேன். முருகனைத் தாலாட்டித் தூங்க வைக்கிற அந்த பூஜையில பொது மக்களோட மக்களாத்தான் வரிசையில நின்னு டிக்கெட் வாங்கித்தான் கலந்துகிட்டு வர்றேன். அதனால அப்ப இருந்தே சாப்பாடு சுத்தமா சைவத்துக்கு மாறிடுச்சு.
இப்ப தைப்பூசத்துக்கு பால்குடம் எடுக்கறேன்னு நேந்திருந்ததால் 48 நாள் முன்னாடியே விரதம் தொடங்கி மதியம் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு வந்தேன். நாளைக்கு என் வீடு கே.கே. நகர்ல இருந்து பால்குடம் எடுத்துட்டு வடபழனி முருகன் கோவிலுக்குப் பாதயாத்திரை போகறதா இருக்கேன்'' என்கிறார்.