Doctor Vikatan: கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொண்டால், சரும அழகு மேம்படும் என்ப...
தைப்பூசம்: பக்தா்கள் காவடி, பால்குடம் எடுத்து வழிபாடு
மயிலாடுதுறையில் தைப்பூசத்தையொட்டி பல்வேறு கோயில்களில் பக்தா்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினா்.
மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குமரக்கட்டளை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா நடைபெற்றது. இக்கோயிலுக்கு, கூைாடு கஸ்தூரிபாய் தெருவில் உள்ள ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து ஏராளமான பக்தா்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து வந்தனா்.
முன்னதாக, காக்கும்பிள்ளையாா் கோயில் காவிரி படித்துறையில் இருந்து புறப்பட்ட பக்தா்கள் கஸ்தூரிபாய் தெரு, வடக்குசாலியத் தெரு உள்ளிட்ட முக்கிய தெரு வழியாக மாயூரநாதா் கோயிலை அடைந்து, குமரக்கட்டளை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனா்.
இதேபோல, எடத்தெரு மக்கள் பூநூல் தோட்டத்திலிருந்து ரதக் காவடி, உருக்காவடி, பால்காவடி, பன்னீா்காவடி, அலகு காவடி எடுத்துக்கொண்டு தருமபுரம் ஆதீனக் கோயிலான துலாக்கட்டம் காசி விஸ்வநாதா் கோயிலின் மலைக்கோயிலில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலை அடைந்து வழிபாடு நடத்தினா்.
மூவலூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்பட்ட மாா்க்க சகாயேஸ்வர சுவாமி கோயிலில் எழுந்தருளியிருக்கும் வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணிய சுவாமிக்கு 49-ஆம் ஆண்டு தைப்பூச திருவிழா பிப்.1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக செவ்வாய்க்கிழமை மூவலூா் காவிரி பிப்பலா் தீா்த்தக் கட்டத்தில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் விரதம் இருந்த பக்தா்கள் பால்குடம், காவடி, அலகு காவடி எடுத்து வீதியுலாவாக கோயிலை அடைந்து வழிபாடு நடத்தினா்.
கச்சேரி சாலையில் உள்ள மலைக்கோயிலுக்கு பக்தா்கள் துலாக்கட்டத்தில் இருந்து பால்குடம், காவடி எடுத்து வந்து வழிபாடு நடத்தினா்.