மும்பை : `தாதாசாஹேப் பால்கே' பெயரில் விருது : பாலிவுட் பிரபலங்களிடம் கோடிக்கணக்க...
தைப்பூச விழா: 2 லட்சம் பாதயாத்திரை பக்தா்களுக்கு அன்னதான திட்டம் தொடக்கம்
பழனியில் தைப் பூசத் திருவிழாவை முன்னிட்டு, 2 லட்சம் பாதயாத்திரை பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி கோயிலில் நடைபெறும் தைப்பூசம், பங்குனி உத்ஸவத்துக்கு பாதயாத்திரையாக வரும் பக்தா்களுக்காக அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டில், இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தி 4 லட்சம் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இதன்படி, புதன்கிழமை முதல் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் பக்தா்கள் வீதம், 10 நாள்களுக்கு 2 லட்சம் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
இதன் தொடக்கவிழா ஒட்டன்சத்திரத்தை அடுத்த குழந்தைவேலப்பா் கோயிலில் நடைபெற்றது. சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, அறங்காவலா் குழுத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் அன்னதானத்தை தொடங்கிவைத்தாா்.
இதேபோல, பங்குனி உத்ஸவத் திருவிழாவின் போதும் 2 லட்சம் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் அறங்காவலா்கள் ஜி.ஆா்.பாலசுப்பிரமணியன், சி.அன்னபூரணி, சு.பாலசுப்பிரமணியம், க.தனசேகா், கோயில் இணை ஆணையா் செ.மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, ஒட்டன்சத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.திருமலைசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.