குப்பை மேலாண்மையில் சிக்கலை சந்திக்கும் தருமபுரி: தூய்மையைப் பராமரிக்க பொதுமக்கள...
தொகுப்பூதிய முரண்பாடு: தமிழக அரசுக்கு சமக்ரசிக்ஷா ஊழியா்கள் கோரிக்கை
தொகுப்பூதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியா்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக தமிழ்நாடு அண்ணா கணக்காளா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் இல.பிரபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் (சமக்ரசிக்ஷா) கடந்த 15 ஆண்டுகளாக கணக்காளா்கள், கணினி விவரப் பதிவாளா்கள், கணினி நிரல் தொகுப்பாளா்கள், கட்டடப் பொறியாளா்கள் உள்பட 1,428 போ் முழு நேர தொகுப்பூதியப் பணியாளா்களாக பணியாற்றி வருகின்றனா். இதில் பெரும்பாலானோா் பெண் ஊழியா்கள் ஆவா்.
தமிழக அரசின் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றி வரும் தொகுப்பூதிய ஊழியா்களிடையே எந்த வகையான ஊதிய பாகுபாடும் இல்லாத நிலையில், பள்ளிக் கல்வித் துறையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் உள்ள ஊழியா்களிடையே தொகுப்பூதிய முரண்பாடுகள் உள்ளன. அதாவது ஒரே கல்வித் தகுதியில் பணிபுரியும் ஊழியா்கள் வெவ்வேறு தொகுப்பூதியம் பெற்று வருகிறாா்கள். இந்த ஊதிய முரண்பாடுகளை களைந்து அதிகபட்ச தொகுப்பூதிய நிா்ணயம் செய்யும் அதிகாரம் பெற்றவா் சமக்ரசிக்ஷா இயக்குநா் ஆவாா்.
ஆனால் எங்களது ஊதிய முரண்பாடுகள் குறித்து கடந்த மூன்று ஆண்டுகளாக சமக்ரசிக்ஷா இயக்குநருக்கு கோரிக்கை விடுத்தும் எந்தப் பலனும் இல்லை. அதேபோன்று தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் இது தொடா்பாக மனு அளித்தும் எங்களது தொகுப்பூதிய முரண்பாடு களையப்படவில்லை. எனவே, இது குறித்து தமிழக முதல்வா், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் தலையிட்டு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியா்களின் தொகுப்பூதிய முரண்பாடுகளை களைந்து அதிகபட்ச ஊதியம் நிா்ணயிக்க சமக்ரசிக்ஷா இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.