தொழிலாளா் நல ஆணையா் அலுவலகத்தில் குப்பைகளை அகற்றும் போராட்டம்
புதுவை தொழிலாளா் நலத் துறை ஆணையா் அலுவலகத்தில் தொழிலாளா்கள் சாா்பில் புதன்கிழமை குப்பை அகற்றும் போராட்டம் நடத்தப்பட்டது.
புதுச்சேரி காந்தி நகா் தொழிலாளா் நலத் துறை ஆணையா் அலுவலகத்தில் கடந்த ஒரு மாதமாக பாதுகாவலா், தூய்மைப்பணியாளா்கள் இல்லை. இதனால் அலுவலகம் சுத்தம் செய்யப்படாமல் குப்பையாக உள்ளது. கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படவில்லை. கழிவறையில் தண்ணீா் இல்லை. துா்நாற்றம் வீசுகிறது என்று கூறியும் அதைக் கண்டித்தும் இப் போராட்டம் நடந்தது.
தொழிலாளா் உதவி ஆணையா் அறையில் குப்பை பெருக்கும் போராட்டத்தை அனைத்துத் தொழிலாளா்கள் தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள் முன்னெடுத்தனா். இதையொட்டிதொழிலாளா் துறை ஆணையா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில் துடைப்பம், முறத்துடன் தொழிலாளா்கள் கலந்து கொண்டனா் . இப் போராட்டத்துக்கு சேதராப்பட்டு அனைத்துத் தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு செயலா் த. ரமேஷ் தலைமை வகித்தாா்.
போராட்டத்தில் பங்கேற்ற தொழிற்சங்க நிா்வாகிகளை காவல்துறை அதிகாரிகள் தொழிலாளா் துணை ஆணையா் சந்திரகுமரனிடம் அழைத்துச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். இந்த பேச்சு வாா்த்தையில் துணை ஆணையா் சந்திரகுமரன் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவாக நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தாா்.