மாணவா்கள் சாதி, மத வேறுபாடின்றி பழக வேண்டும்: திருவண்ணாமலை ஆட்சியா் அறிவுறுத்தல்
தோஷங்கள் போக்கும்...
அசுரர்களை அழித்ததால் தனக்கு ஏற்பட்ட வீரஹத்தி தோஷம் நீங்க, பரிகாரம் கேட்டார் முருகன். அப்போது, "கீழ்வேளூரில் சுயம்புலிங்கமாய் அருள்பாலிக்கும் தன்னைச் சுற்றிலும் நவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும்' என்று சிவன் கூறினார். அதன்படி ஒன்பது ஊர்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அந்த இறைவன் கேடுகளைக் களையும் "கேடிலீஸ்வரர்' என்ற பெயரோடு, கிழக்கு நோக்கிய சந்நிதியில் லிங்க வடிவில் அருளுகிறார்.
"யார் வலிமை மிக்கவர்' என்று வாயு பகவானும் ஆதிசேஷனும் பேசும்போது விபரீதமாகியது. ஆதிசேஷன் தன் வலிமையைக் கொண்டு மேருமலையை தன் வாலால் இறுக்கிப் பிடிக்க, வாயு தன் சக்தியெல்லாம் திரட்டி வீசியடித்தும் அசைக்க முடியவில்லை. உடனே வாயுபகவான் இங்கிருக்கும் இறைவனை வணங்கி, பலம் பெற்று வந்து மேருவை அசைத்தார்.
வாயுவின் பலத்தாலும், ஆதிசேஷனின் செருக்காலும் பலம் குறைந்த சிகரத்தின் ஒருபகுதி துண்டாகி, பதரி வனத்தில் வந்து விழுந்தது. ஆதிசேஷன் வலிமை குன்றினார். அனந்தன் இதைக் கண்டு வருந்தி, தன் சகோதரன் பிழையால் நடந்ததைக் கேட்டு மேருவின் சிகரம் வந்து விழுந்த இந்தத் தலத்துக்கு வந்து சிவனின் பேரொளியை கண்டு மெய்சிலிர்த்தார். வனத்தின் மேல் பாகத்தில் ஒரு தடாகத்தை தனது பெயரால் உண்டாக்கி, நர்மதா தீர்த்தத்திலிருந்து கொண்டு வந்த பானலிங்கத்தை தடாகத்தின் மேல் கரையில் நிறுவினார்.
வழிபட்டு முடிக்க இறைவன், "வேண்டும் வரம் கேள்' என்றார். "தன் சகோதரன் முழு பலமடைய வேண்டும்' என அனந்தன் கேட்டார். அப்போது சிவன், தன்னை வழிபடுவோருக்கு சகல தோஷங்களிலும் விலக்க வேண்டுமாறு கூறினார். அதனை ஏற்ற அனந்தனும் ஆதிசேஷனுக்கும் பிரதிபலன் அளித்தார். ஆதிசேஷன் பலத்தை முன்னிலும் பன்மடங்கு பெற்று அளித்து அகங்காரம் இல்லாது சாந்தச் சொரூபியாக அங்கேயே குடி கொண்டார். அதனால் இப்பகுதி "சேஷபுரி' எனவும் அழைக்கப்படுகிறது.
அனந்தன் நிறுவிய அந்த லிங்கம் அவர் பெயராலேயே "அனந்தீஸ்வரர்' என்றும் "சேஷபுரீஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறது.
ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த அனந்தீஸ்வரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு உள்பட்ட கீழ் வேளூரில் கேடிலியப்பர் கோயிலின் மேற்கு கோபுர வாயிலுக்கு நேர் மேற்கே. கிழக்கு நோக்கிய பெரிய குளத்தின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது. 42 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜனவரி 19}இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
}இரா.இரகுநாதன்