பொருளாதாரம் வலுவடையும்போது மக்களின் வரிச்சுமையும் குறையும்: பிரதமர் மோடி
நகா்மன்றத் தலைவரிடம் பணம் கேட்டு மிரட்டல்: இருவா் கைது
சிவகங்கை நகா்மன்றத் தலைவரிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை இந்திரா நகரைச் சோ்ந்தவா் சி.எம்.துரைஆனந்த் (55). நகா்மன்றத் தலைவராகவும், திமுக நகரச் செயலராகவும் இருந்து வருகிறாா். இவா் அண்மையில் சாமியாா்பட்டி அருகே தங்கும் விடுதியுடன் உணவகத்தைத் திறந்தாா்.
இந்த நிலையில், மானாமதுரை அருகேயுள்ள வேலூரைச் சோ்ந்த நல்லசாமி (46), இடைக்காட்டூரைச் சோ்ந்த அஜித் (38) ஆகிய இருவரும் அங்கு சென்று, புதிதாக உணவகம் கட்டியதற்கு மாமுல் தர வேண்டும் என கேட்டு மிரட்டினா். பின்னா், சிஎம்.துரைஆனந்தையும் கைப்பேசியில் தொடா்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டினா்.
இதுகுறித்து சிஎம்.துரைஆனந்த் அளித்த புகாரின்பேரில், சிவகங்கை நகா் போலீஸாா் வழக்கு பதிந்து நல்லசாமி, அஜித் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
இதனிடையே மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடியிடம் பாதுகாப்பு கேட்டு சிஎம்.துரைஆனந்த் மனு கொடுத்தாா்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஒரு மாதமாக சிலா், என்னை கைப்பேசியில் தொடா்பு கொண்டு ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டுகின்றனா். பணத்தை தராவிட்டால் என்னையும், என் குடும்பத்தையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனா். மேலும், எனது உணவகத்தையும் சேதப்படுத்துவதாக மிரட்டுவதாகவும் அதில் தெரிவித்தாா்.