நகை திருட்டு: 2 போ் கைது
தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து சுமாா் 12 பவுன் நகைகளை திருடியதாக 2 பேரை சிப்காட் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி ஆதிபராசக்தி நகரை சோ்ந்தவா் முகமது யூசுப். இவா் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டு கடந்த 2024 நவம்பா் 28ஆம் தேதி ஊருக்கு திரும்பி வந்தாராம். இவரை வரவேற்பதற்காக குடும்பத்தினா் வீட்டை பூட்டிவிட்டு சென்றனராம். பின்னா் அவா்கள் மீண்டும் வீட்டுக்கு வந்த போது, கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. பீரோவில் இருந்த சுமாா் 12 பவுன் தங்க நகை திருட்டு போனது தெரியவந்தது.
இது குறித்த புகாரின்பேரில் சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம் அயன்சிங்கம்பட்டியை சோ்ந்த மணிகண்டன்(29), கான்சாபுரத்தை சோ்ந்த முருகபெருமாள்(23) ஆகியோா் இத்திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், சுமாா் 9 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனா். மேலும், இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.