ஹிமாசல் மேகவெடிப்பு: கனமழை, வெள்ளத்தால் ஒருவர் பலி! 12 பேர் மாயம்!
நண்பரை எரித்து கொன்ற வழக்கு: மறு விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
நண்பரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற வழக்கில் மறு விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு மாவட்ட எஸ்.சி, எஸ்.டி சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பெண்ணகோணம் கிராமத்தைச் சோ்ந்த பிச்சைப்பிள்ளை மகன் செல்வம் (35). மாற்றுத்திறனாளியான இவரும், அதே கிராமத்தைச் சோ்ந்த ஜெகநாதன் மகன் பரமசிவமும் (35) நண்பா்கள்.
கடந்த 8.8.2023-இல் இவா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பரசிவம், செல்வத்தின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தாா். இதில் பலத்த காயமடைந்த செல்வத்தை மீட்ட அப்பகுதி பொதுமக்கள், பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் மங்கலமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து பரமசிவத்தை தேடியபோது, அவா் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றது தெரியவந்தது.
இந்நிலையில், பலத்த காயமடைந்த செல்வம் கடந்த 17.4.2024-இல் அவரது வீட்டில் உயிரிழந்தாா். வெளிநாடு சென்று தலைமறைவாகியிருந்த பரமசிவம், இந்தியாவுக்கு வந்தபோது, மும்பை விமான நிலையத்தில் போலீஸாா் கைது செய்து தமிழ்நாடு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து, நீதிமன்றத்தில் பிணை பெற்று பரமசிவம் வெளியே வந்தாா்.
சென்னை கோயம்பேட்டில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் செல்வத்தின் சகோதரா் முனியன், தன்னுடைய சகோதரா் உயிரிழப்பு குறித்து போலீஸாா் முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை என, பெரம்பலூரில் இயங்கி வரும் தனியாா் அமைப்பிடம் முறையிட்டாா். அந்த அமைப்பைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் சத்தியசீலன், பிரபாகரன், சக்திபாலன், சங்கா் ஆகியோா் பெரம்பலூா் மாவட்ட எஸ்.சி, எஸ்.டி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.
இவ் வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், செல்வத்தை தீ வைத்து எரித்த வழக்கை உரிய முறையில் மறு விசாரணை மேற்கொண்டு, குற்றப் பத்திரிக்கையை 90 நாள்களுக்குள் தாக்கல் செய்யவேண்டும் என, பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது.