புதுச்சேரி: `ஆண்டுக்கு ரூ.400 கோடிக்கு போலி மதுபானங்கள் தயாராகின்றன!’ – அதிர்ச்ச...
நம்பினால் நம்புங்கள்! பாம்பு கடித்து 58 முறை இறந்த 2 பேர்: இது மத்திய பிரதேச முறைகேடு!!
போபால்: பாம்பு கடித்து இறப்பவர்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தில் பல கோடி ரூபாய் அரசுப் பணம் முறைகேடு செய்யப்பட்டுள்ளதும், இதற்காக இரண்டு பேர் 58 முறை பாம்பு கடித்து இறந்ததாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் சியோனி மாவட்டம் - தி ஜங்கிள் புக்கில் வரும் கா பாம்பின் நிலம் என்று அழைக்கப்படுவது - கோடிக்கணக்கான அரசுப் பணத்தை முறைகேடு செய்வதற்காக நடத்தப்பட்ட மோசடியில், ஒரு ஆண் 30 முறையும், ஒரு பெண் 29 முறை பாம்பு கடித்து 'இறந்துள்ளனர்'.
அதாவது, கிராமப் பகுதிகளில் இதுபோன்ற அசம்பாவிதங்களில் பலியாகும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் மாநில அரசின் திட்டத்தின் மூலம், போலியாக இழப்பீடு கோருவதற்காக, அதிகாரப்பூர்வ பதிவுகளில் பாம்பு கடித்து, நீரில் மூழ்கி, மின்னல் பாய்ந்து இறந்ததாகப் போலியாகக் கணக்குக் காட்டி சுமார் ரூ.11.26 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
சியோனி மாவட்டத்தின் கியோலாரி தாலுகாவின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்து, ஜபல்பூர் நிதித்துறை நடத்திய விரிவான விசாரணையில்தான் போலியான இறப்புகளைக் காட்டி ரூ.11.26 கோடி அளவுக்கு மோசடி நடந்தது அம்பலமாகியிருக்கிறது.
அது மட்டுமல்ல, மோசடி செய்யப்பட்ட தொகையானது 47 பேரின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்று கடந்த ஓராண்டாக விசாரணை நடத்திய குழுவுக்கு தலைமை தாங்கிய நிதித் துறை இணை இயக்குநர் ரோஹித் கௌஷல் தெரிவித்துள்ளார்.
இந்த ஒட்டுமொத்த மோசடி மற்றும் முறைகேடுக்கும் மூளையாக செயல்பட்டிருப்பது கியோலாரி தாலுகா அலுவலக உதவியாளர் சச்சின் தஹாயக் என்பதும், இவர்தான், தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள், பினாமிகளின் வங்கிக் கணக்கில் மோசடி செய்த பணத்தை செலுத்தியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசுப் பணம், பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்படாமல், முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதும், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட மோசடி என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.