செய்திகள் :

பாகிஸ்தானுடன் எப்போதெல்லாம் சண்டை?

post image

ஜம்மு-காஷ்மீரின் கார்கில் பகுதியை பாகிஸ்தானிய படைகளும் பயங்கரவாதிகளும் ஆக்கிரமித்தபோது 1999ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே மிகக் கடுமையான கார்கில் போர் உண்டானது.

இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற போர்களிலேயே மிகத் தீவிரமாக அதாவது மே மாதம் தொடங்கி ஜூலை மாதம் வரை நீடித்த கார்கில் போரில் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்புகளை அழித்தொழித்திருந்தது இந்திய ராணுவம்.

பொதுவாக, இந்தத் தலைமுறையினரில் சிலருக்கு இந்தியா - பாகிஸ்தான் என்றால் கார்கில் போர் மட்டுமே தெரிந்திருக்கலாம். ஆனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடங்கியது 1947ஆம் ஆண்டு.

தற்போது 2025ஆம் ஆண்டு, மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், அதற்கு எதிர்த் தாக்குதலாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றுமொரு போருக்கு வித்திட்டுள்ளது. கிட்டத்தட்ட இரு நாட்டு எல்லையில் போர் தொடங்கிவிட்டது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், சர்வதேச எல்லைக்குள் அத்துமீறி நுழையாமலேயே, இந்திய முப்படைகளும் நடத்திய அதிதுல்லிய தாக்குதலில் பயங்கரவாத அமைப்புகளின் ஒன்பது முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய அரசு, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தபோதே மக்கள் சற்று கலக்கம் அடைந்தனர். எல்லைகள் மூடப்பட்டன, வர்த்தகம் நிறுத்தப்பட்டது, பாகிஸ்தான் மக்கள் நாட்டை விட்டே வெளியேற்றப்பட்டனர். மே 7 ஆம் தேதி நாடு முழுவதும் போர் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், அதற்கு முன்பே, மே 6ஆம் தேதி நள்ளிரவே, பாகிஸ்தான் மீது சிந்தூர் தாக்குதலை நடத்திவிட்டது.

இதனால், இந்திய மக்களிடையே அதுவும் பாகிஸ்தானிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் தமிழக மக்களும்கூட, போர் வந்துவிடுமோ என்று அச்சம்கொள்ளத் தொடங்கிவிட்டனர்.

இந்தியா - பாகிஸ்தான் போர் இன்றோ நேற்றோ தொடங்கியது அல்ல..

1. 1947 - முதல் போர்

இந்தியாவுடன் இணைக்கப்படாமல் இருந்த ஜம்மு - காஷ்மீர் சமஸ்தானத்துக்குள், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ஊடுருவி ஆக்கிரமிக்கத் தொடங்கியபோது புதிதாக சுதந்திரம் அடைந்திருந்த இந்தியா - பாகிஸ்தான் இடையே 1947ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் போர் மூண்டது. ஜம்மு - காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க மகாராஜா ஹரி சிங் ஒப்புக்கொண்டதையடுத்து, ராணுவப் படைகளை ஜம்மு - காஷ்மீருக்கு அனுப்பி, பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டது இந்தியா.

இந்தப் போர் 1949, ஜனவரி வரை நீடித்தது. ஐ.நா.வின் தலையீட்டால் போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே சர்வதேச எல்லைக் கோடு உருவாக்கப்பட்டது.

2. 1965 - ஆபரேஷன் ஜிப்ரால்டர்

1965ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி காஷ்மீர் பகுதியில் இருநாட்டு ராணுவமும் சண்டையிட்டது. சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வழியாக பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றபோது இந்த போர் மூண்டது.

இதற்கு இந்தியா அளித்த பதிலடிக்கு ஆபரேஷன் ஜிப்ரால்டர் என பெயரிடப்பட்டது. ஊடுருவல் மற்றும் உள்நாட்டில் பயங்கரவாதக் குழுக்கள் உருவாவதையும் தடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. சர்வதேச எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் தனது முழு பலத்தையும் கொண்டு பதில் தாக்குதல் நடத்தியது. இந்த போர் 1965ஆம் ஆண்டு செப்டம்பர் வரை நீடித்தது. சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்க தலையீட்டின் காரணமாக போர் நிறுத்தம் உண்டானது.

3. 1971 - வங்கதேச சுதந்திரப் போர்

1971ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே உருவான போர், கிழக்கு பாகிஸ்தான்மீது (தற்போது வங்கதேசம்) பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அடக்குமுறையை எதிர்த்தும், தனி நாடு கோரிக்கை எழுச்சியின் காரணமாகவும் ஏற்பட்டது.

கிழக்கு பாகிஸ்தானின் தனி நாடு கோரிக்கையை ஏற்று, தற்போதைய வங்கதேசத்துக்காக போரிட்டது இந்தியா. கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் கடுமையான போர் நடந்தது. இறுதியில் 1971 டிசம்பர் 16ல் பாகிஸ்தான் சரணடைந்தது.

இந்தப் போர்தான், வங்கதேசம் என்றொரு சுதந்திர நாடு உருவாகக் காரணமாக இருந்தது.

4. 1999 - கார்கில் போர்

கார்கில் சிகரத்துக்குள் பாகிஸ்தானிய படைகளும், பயங்கரவாதிகளும் ஊடுருவியபோது, உலகில் மிக உயரமான இடத்தில் நடத்தப்பட்டதாக அடையாளம் காணப்படும் கார்கில் போர் 1999 மே முதல் ஜூலை வரை நீடித்தது.

நம் நாட்டின் நிலப்பரப்பை மீட்கும் இந்த போருக்கு ஆபரேஷன் விஜய் என்று பெயரிடப்பட்டது. இந்திய விமானப் படையின் ஆபரேஷன் சஃபேத் சாகர் என்ற அதிரடித் தாக்குதலின் ஆதரவோடு இந்தியா வெற்றி பெற்றது. ஜூலை 26ஆம் தேதி இந்தியா, ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்பை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. அந்த நாள்தான் தற்போது கார்கில் வெற்றி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

1999 கார்கில் போர்

5. 2016 - உரி தாக்குதல்

ஜம்மு - காஷ்மீரின் உரி பகுதியில் அமைந்திருந்த இந்திய ராணுவ முகாம் மீது 2016, செப்டம்பர் 18ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். தொடர்ந்து, எல்லைப் பகுதியில் 28 - 29ஆம் தேதிகளில் சர்ஜிகல் தாக்குதலை இந்திய ராணுவம் மேற்கொண்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் இருந்த ஏராளமான பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தொழித்தது. இதில், இந்தியாவுக்குள் ஊடுருவக் காத்திருந்த ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

6. 2019 - புல்வாமா தாக்குதல்

2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புல்வாமா பகுதியில் ராணுவ வாகனங்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக, பிப்ரவரி 26ஆம் தேதி, இந்திய விமானப் படை, பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் இருந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம் மீது தாக்குதல் நடத்தியது. விமானப் படையின் ஜெட்களைக் கொண்டு பாகிஸ்தானின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, விமானப் படை தாக்குதல் நடத்திவிட்டுத் திரும்பியது.

புல்வாமா

1971ஆம் ஆண்டு நடந்த போருக்குப் பின் இப்படியொரு தாக்குதல் நடத்தப்பட்டது அதுவே முதல்முறை.

நாள்தோறும் எல்லைப் பகுதியில் தாக்குதல், பதிலடி, தொடர் தாக்குதல் நடைபெற்று வந்தாலும் இந்தியா - பாகிஸ்தான் இடையே வரலாற்றில் பதிவு செய்யும் வகையில் ஆறு மிகப்பெரிய போர்கள் நடந்து முடிந்துள்ளன. இரு தரப்பிலும் மிகப்பெரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

தற்போது, இரு நாடுகளுக்கும் இடையே சூழ்ந்திருக்கும் போர் மேகம் தீவிரமடையுமா? என்பதே இரு நாட்டு மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகின் கவலையாக உள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் எப்படிப்பட்ட வெற்றி? போர் நிபுணர் அளித்திருக்கும் மாஸ் விளக்கம்!

புது தில்லி: பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதிகளில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம்களைக் குறி வைத்து இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர், மிகப்பெரிய வெற்றியை அடைந்திருப்பதாக, போர் ... மேலும் பார்க்க

வருமான வரித் தாக்கல்: பழவம்-16ல் புதிய மாற்றம்! ஏன் தெரியுமா?

2025-26ஆம் நிதியாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதமே வந்துவிட்டது. வருமான வரி செலுத்துவோர், தங்களது வருமான வரி கணக்குத்தாக்கலுக்கான அனைத்து வேலைகளையும் தீவிரமாக செய்து வருவார்கள்.கடந்த 2024 - 25ஆம் நித... மேலும் பார்க்க

காலில் சாதாரண செருப்பு.. தள்ளாடியபடி வந்த பீமவ்வா! இவருக்காக நெறிமுறையை மீறிய முர்மு!

கர்நாடக மாநிலம் கொப்பல் நகரில் வாழ்ந்து வரும் தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பீமவ்வா தொட்டபலப்பா ஷில்லேக்யதாரா (96) நாட்டின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.ஒட்டு ... மேலும் பார்க்க

டிரம்ப் 100 நாள்கள்! நூற்றுக்கு நூறு பெற்றாரா?

அமெரிக்காவின் 47ஆவது அதிபராகவும் இரண்டாவது முறையாகவும் டொனால்ட் டிரம்ப் பதவியேற்று, 100 நாள்கள் நிறைவடைந்த நிலையில், 100 நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியை மிக்சிகன் மாகாணத்தில் டிரம்ப் நடத்தினார். இந்த நிகழ்... மேலும் பார்க்க

கோடைக்கால விற்பனை: ஸ்மார்ட்போன்களுக்கான சலுகைகள் என்னென்ன?

கோடைக்காலத்தையொட்டி பல்வேறு நிறுவனங்கள் சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகின்றன. சிறிய துணிக்கடை முதல் பெரிய மின்னணு பொருள்கள், கார் விற்பனை நிலையங்கள் வரை வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் கோடைக்கால சிற... மேலும் பார்க்க

அரிசி கிலோ ரூ.340, கோழிக்கறி ரூ.800; அதள பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்!

ஏற்கனவே, பாகிஸ்தான் பொருளாதாரம் அதளபாதாளத்தில் விழுந்துகிடக்கும் நிலையில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால், பாகிஸ்தான் - இந்தியா இடையே பதற்றம் ஏற்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.ஏப்ரல் 22ஆ... மேலும் பார்க்க