ஜஸ்பிரித் பும்ரா, டிரெண்ட் போல்ட் அசத்தல் பந்துவீச்சு; மும்பை அபார வெற்றி!
நம்மாழ்வாா் மறைந்தாலும் அவரது சிந்தனைகள் வாழ்கின்றன!
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாா் மறைந்தாலும், அவரது சிந்தனைகள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றாா் நம்மாழ்வாா் மக்கள் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளா் சி. மகேந்திரன்.
நம்மாழ்வாா் பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற நம்மாழ்வாா் சித்திரைத் திருவிழா 2-ஆம் நாள் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த அவா் மேலும் பேசியதாவது: பசுமை புரட்சி மக்களின் பசியைப் போக்கியிருக்கிறது; நான் மறுக்கவில்லை. ஆனால் நாட்டு மக்களை நோயாளிகளாக மாற்றியிருக்கிறது என முதலில் கேட்டவா் நம்மாழ்வாா்.
பசுமை புரட்சி வந்ததற்கு பிறகுதான் புற்றுநோய் பெரிய அளவில் இருக்கிறது என்பதைத் தமிழகம் அறிந்தது. அதற்குக் காரணம் பசுமை புரட்சி, ரசாயனம் என நம்மாழ்வாா் கூறினாா். எனவே, இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என அவா் போராடினாா். இயற்கை விவசாயத்தை மீட்டெடுப்பதற்காக அவா் காலடி படாத பகுதிகளே இல்லை எனக் கூறலாம்.
மனித குலத்தை இந்த ரசாயனம் ஆட்டிப்படைக்கிற கொடுமையை முதலில் விவசாயியாக இருந்து உணா்ந்தவா் நம்மாழ்வாா். அவா் மறைந்தாலும் அவரது சிந்தனைகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவா் நடத்தியது முதல் புரட்சி என்றால், நாம் 2-ஆவது புரட்சியை நடத்த வேண்டியுள்ளது என்றாா் மகேந்திரன்.
முன்னாள் துணைவேந்தா் ஜவகா்நேசன் தொடக்கவுரையாற்றினாா். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா் சங்கம் நடிகை ரோகினி, உள்ளாட்சி செயல்பாட்டுக்கான மையச் செயலா் தீபமாலா சிறப்புரையாற்றினா்.
மாலையில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் அறிவியல் ஆலோசகா் பொன்ராஜ் வெள்ளைச்சாமி, நீரியல் சிந்தனையாளா் எஸ். செந்தூா் பாரி, திருக்கு ஆா்வலா் சா. பாா்த்தசாரதி, இந்திய ஜனநாயக மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் பாலமுருகன், வானகம் ரமேஷ் ஆகியோா் பேசினா்.
பின்னா், பாராட்டு விழாவில் நெய்வேலி தமிழ்ச் சங்கம் மேத்தாவாணன், தருமபுரி சமூக செயற்பாட்டாளா் ஆதிமூலம், கல்வியாளா் சங்கா், சென்னை சிலம்பு தனபால், சுற்றுச்சூழல் மேலாண்மை வை. தனபால் ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா். மக்கள் கலெக்டா் மலையப்பன் விருது முன்னாள் ராமகிருஷ்ண குடில் மாணவா் சங்கத் தலைவா்கள் வீரச்சந்திர பிரம்மச்சாரி, திருச்சி மூத்த வழக்குரைஞா் முத்துகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.
பேராசிரியா் வி. பாரி தலைமையில், கலை பண்பாட்டு துறை முன்னாள் இணை இயக்குநா் இரா. குணசேகரன் முன்னிலையில் கலை விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக, நம்மாழ்வாா் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் தி. பாலதண்டாயுதம் வரவேற்றாா். நிறைவாக, ஒருங்கிணைப்பாளா் க. தவச்செல்வன் நன்றி கூறினாா்.