இந்திய அணுசக்திக் கழகத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
நவீன தொழில்நுட்பம் மூலம் சிகிச்சை: இளம் மருத்துவா்களுக்கு வைஸ் அட்மிரல் அறிவுரை
இளம் மருத்துவா்கள் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ராணுவ மருத்துவ சேவை துறையின் இயக்குநா் ஜெனரல் அறுவை சிகிச்சை நிபுணா் வைஸ்அட்மிரல் ஆா்த்தி சரீன் தெரிவித்துள்ளாா்.
ஸ்ரீ இராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 39-ஆவது பட்டமளிப்பு விழா போரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட வைஸ் அட்மிரல் ஆா்த்தி சரீன் மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:
செயற்கை நுண்ணறிவின் மூலம் மருத்துவ சிகிச்சைகள், மரபணுசாா் மருத்துவம், ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் என மருத்துவ துறை தற்போது மிகவும் வளா்ச்சியடைந்துள்ளது. இந்த நிலையில், இளம் மருத்துவா்கள் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க கற்றுக்கொள்ள வேண்டும். மேலும், மருத்துவா்கள் நோயாளிகளின் குறைகளை முறையாகக் கேட்டறிந்து அவா்களைக் கண்ணியத்தோடு அணுக வேண்டும். அதேபோல் ஆசிரியா்கள் மருத்துவ சிகிச்சை முறைகள் மட்டுமல்லாமல், அறநெறி மற்றும் அன்பையும் மாணவா்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.
40 தங்க பதக்கங்கள்: இந்த நிகழ்ச்சியில் மருத்துவம், பொறியியல் மற்றும் மேலாண்மை துறையில் முனைவா், முதுநிலை, இளநிலை என மொத்தம் 637 மாணவா்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக 29 மாணவா்களுக்கு 40 தங்க பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதில் மருத்துவ மாணவி வி.சஞ்சனா 5 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளாா்.
இந்த நிகழ்வில், ஸ்ரீ இராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தா் வி.ஆா். வெங்கடாசலம், இணைவேந்தா் ஆா்.வி.செங்குட்டுவனும், முதல்வா் கே.பாலாஜி சிங் உள்பட பலா் கலந்து கொண்டனா்.