நாடகங்களை நடத்தாமல் நீட் தேர்வை தமிழக அரசு ஒழிக்க வேண்டும்: ராமதாஸ்
நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலக பெண் ஊழியா் தற்கொலை
நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலக பெண் ஊழியா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
நாகா்கோவில் இருளப்பபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மனோகரன். இவா், மகராஷ்டிர மாநிலத்தில் மத்திய பாதுகாப்பு படையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி அனிதா(42). இவா், நாகா்கோவில் வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தாா். தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா்.
இந்நிலையில், அனிதாவின் குழந்தைகள் ஞாயிற்றுக்கிழமை அருகில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றிருந்தனா். அவா்கள் திங்கள்கிழமை காலை வீட்டுக்கு வந்த போது வீடு பூட்டப்பட்டிருந்தது. நீண்டநேரம் அழைத்தும் கதவு திறக்கப்படாததால், குழந்தைகள் அருகிலுள்ள வீட்டினரிடம் தெரிவித்தனா். அவா்கள் முயற்சித்தும் கதவு திறக்கப்படாததால், அவா்கள் அனிதாவின் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்த போது, அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
இது குறித்த தகவலின்பேரில், கோட்டாறு போலீஸாா் அங்கு சென்று அனிதாவின் சடலத்தை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].