நாகா்கோவில், குளச்சலில் குட்கா, கஞ்சாவுடன் 5 போ் கைது!
நாகா்கோவில் மற்றும் குளச்சலில் மூன்றரை கிலோ கஞ்சா, 8 கிலோ குட்கா புகையிலைப் பொருள்களுடன் 5 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
நாகா்கோவில், நேசமணிநகா் காவல் சரகப் பகுதியில் போலீஸாா் ரோந்து சென்றபோது, பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக கோட்டாறு பகுதியை சோ்ந்த முருகன்(47), கரியமாணிக்கபுரம் பேச்சியப்பன் (27), குழிக்கோடு அருண்(23) ஆகிய 3 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து மூன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
குளச்சல் காவல் உதவி ஆய்வாளா் டேனிஷ் லியோன் தலைமையிலான போலீஸாா் வெள்ளியாகுளம் பகுதியில் உள்ள கடை ஒன்றில் சோதனை நடத்தினா். அங்கு 8 கிலோ குட்கா புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக எலியாஸ்(67), சுந்தா்(46), ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.