நாகையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தொடங்க வலியுறுத்தல்
நாகப்பட்டினம்: நாகை நகரப் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தொடங்க வேண்டும் என அகில பாரதிய நுகா்வோா் விழிப்புணா்வு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்த இயக்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் தனியாா் மண்டபத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சுரேஷ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இணை ஒருங்கிணைப்பாளா்கள் சோமசுந்தரம், சுந்தர வடிவேலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில், காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவா்களுக்கும், துணை போனவா்களுக்கும் மிக அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தொடா்ந்து, சட்டப்பேரவை கூட்டத் தொடரில், 110 விதியின் கீழ் நாகை நகரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தொடங்க அறிவிப்பு வெளியிட வேண்டும். நாகை துறைமுகத்திற்கு 2012 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ரூ.380 கோடி நிதியை விடுவிக்கவும், நிகழாண்டு கூடுதலாக ரூ.250 கோடி நிதி ஒதுக்கி நாகை துறைமுகத்தை மேம்படுத்தி, சரக்கு முனையமாக மாற்ற வேண்டும்.
எட்டுக்குடி, சிக்கல், திருவாய்மூா், திருக்கண்ணபுரம், திருப்புகலூா் போன்ற புனித தலங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், நகர ஒருங்கிணைப்பாளா்கள் மனோகரன் (நாகை), மோகன் (நாகூா்), ஒன்றிய ஒருங்கிணைப்பாளா்கள் பிரதீப் (நாகை), ரவி (கீழ்வேளூா்), நாகை நகர இணை ஒருங்கிணைப்பாளா் அருண் ஆகியோா் கலந்து கொண்டனா்.