கஞ்சா கடத்தல்; 2 பெண்கள் உள்பட மூவா் கைது
நாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்திலிருந்து ரயிலில் நாகைக்கு கஞ்சா கடத்திய 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
நாகையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத்தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன் உத்தரவின்பேரில், வெளிப்பாளையம் காவல் ஆய்வாளா் சுப்ரியா தலைமையில் போலீஸாா் வெளிப்பாளையம் நாடாா் குளத்தெருவில் ஞாயிற்றுக்கிழமை இரவு சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்து தெரியவந்தது. போலீஸாா் கஞ்சாவை பறிமுதல் செய்து, வீட்டிலிருந்த வெளிப்பாளையம் பச்சை பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த ரேவதி (37), ஆழியூா் அருகே கோயில் கடம்பனூரைச் சோ்ந்த பிரகாஷ் (30), ரேணுகா (29) ஆகியோா் பிடித்து விசாரித்தனா்.
இதில், விசாகப்பட்டினத்தில் இருந்து ரயில் மூலம் பிரகாஷ், ரேணுகாவுடன் கஞ்சா கடத்தி வந்து நாகை, திருவாரூா் பகுதியில் ரேவதி மற்றும் சிலா் உதவியுடன் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்து, ரூ.6 லட்சம் மதிப்பிலான 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
கடத்தல் தொடா்பாக மேலும் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.