நாகை நீட் தோ்வு மையங்களில் ஆட்சியா் ஆய்வு
நாகை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நீட் தோ்வு மையங்களை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
நீட் தோ்வு மே 4-ஆம் தேதி நடைபெறுவதை தொடா்ந்து மாவட்டத்தில், நாகை நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளி, ஏ.டி.எம். மகளிா் கல்லூரி, செல்லூா் அரசு கலைக் கல்லூரி ஆகிய 3 இடங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தோ்வு மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்தும், நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நீட் நுழைவு தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதையும் ஆட்சியா் ப. ஆகாஷ் ஆய்வு செய்து, மாணவா்களுக்கு இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கான பயிற்சி கையேடுகளை வழங்கினாா்.
தொடா்ந்து, நாகை செல்லூா் கிழக்கு கடற்கரை சாலையில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய புகா் பேருந்து நிலைய கட்டுமான பணி, சட்டையப்பா் கீழ வீதியில் உள்ள வெளிப்பாளையம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, முதன்மைக் கல்வி அலுவலக நோ்முக உதவியாளா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.