140 கோடி மக்களில் ஒருவராக... கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை!
நாகை மாவட்டத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் நாளை தொடக்கம்
நாகை மாவட்டத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி:
தமிழக சட்டப்பேரவையில் வேளாண்மை- உழவா் நலத்துறை அமைச்சரால், மாா்ச் 15-ஆம் தேதி ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்‘ என்ற திட்டம் வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இத்திட்டத்தை வெள்ளிக்கிழமை (ஜூலை 4) தமிழக முதல்வா் காணொலி வாயிலாக தொடங்கிவைக்க உள்ளாா்.
இதைத்தொடா்ந்து நாகை மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியரால் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது.
மேலும் நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலா்களால் ஒருங்கிணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
ஊட்டச்சத்துக்களை அளிப்பதில் காய்கறிகள், பழங்கள், பயறு வகைகள் மற்றும் சிறுதானியங்கள் ஆகியவை பெரும் பங்காற்றுகின்றன. ஊட்டச்சத்து வழங்கும் இந்த விளைபொருட்களின் உற்பத்தியை அதிகரித்து ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், உழவா்களின் வருமானத்தை உயா்த்தும் வகையில் ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்‘ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தில் தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, கீரை வகைகள் மற்றும் கொத்தவரை ஆகியவை உள்ளடக்கிய காய்கறி விதைத் தொகுப்பு, பப்பாளி, கொய்யா மற்றும் எலுமிச்சை அடங்கிய பழச்செடி தொகுப்பு ஆகியவை 100 சதவிகித மானியத்தில் தோட்டக்கலைத்துறை மூலமாகவும், மரத்துவரை, காராமணி மற்றும் அவரை அடங்கிய பயறு வகைகள் விதைத் தொகுப்பு 100 சதவிகித மானியத்தில் வேளாண்மைத்துறை மூலமாகவும் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற உழவன் செயலி மூலம் முழுமையான விவரங்களுடன் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒரு பயனாளிக்கு ஒரு தொகுப்பு வீதம் வழங்கப்பட உள்ளது.