ஆபத்தில் Modi-யின் PM பதவி? RSS-ன் 8 இடிகள்! | Elangovan Explains
"நாடாளுமன்ற, சட்டமன்ற செயல்பாடுகளில் உச்ச நீதிமன்றம் தலையிடுகிறது" - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு
தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டதை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், "அதிகபட்சம் மூன்று மாத காலத்திற்குள் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும்" என அதிரடி தீர்ப்பை வழங்கியிருந்தது.
அதைத்தொடர்ந்து குடியரசுத் தலைவர், இத்தகைய தீர்ப்பு குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 14 கேள்விகளை எழுப்பி கடிதம் எழுதியிருந்தார்.
இந்தக் கடிதத்தை மனுவாக மாற்றிய தலைமை நீதிபதி, அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என அறிவித்திருந்தார்.

அதன்படி தலைமை நீதிபதி கவாய் மற்றும் நீதிபதிகள் சூர்யகாந்த், பி.எஸ். நரசிம்மா, விக்ரம் நாத், ஏ.எஸ். சந்துருகர் என ஐந்து பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இந்த விவகாரத்தை விசாரித்து வருகிறது.
இந்த விவகாரத்தில் ஏற்கெனவே பதில் மனு தாக்கல் செய்திருந்த தமிழக மற்றும் கேரளா அரசுகள், "குடியரசுத் தலைவரின் கடிதத்தை அவருக்கே திருப்பி அனுப்ப வேண்டும்.
இதில் மேற்கொண்டு விசாரிக்க எதுவும் இல்லை" எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தனது வாதங்களை முன்வைக்க முற்பட்டபோது, "இந்த மனு விசாரணைக்கு உகந்ததா இல்லையா என்பதை முதலில் பார்க்க வேண்டியிருக்கிறது.
எனவே இந்த மனு மீதான விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்நாடு, கேரள அரசுகள் தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களை முதலில் கேட்போம்" எனத் தலைமை நீதிபதி அறிவித்தார்.
அதன்படி கேரளா அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், "ஏற்கனவே மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்காமல் இருப்பது தொடர்பான பஞ்சாப் மாநில அரசின் வழக்கில் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக என்ற அரசியல் சாசன பிரிவு 200-ல் உள்ள வார்த்தையை உச்ச நீதிமன்றம் பகுத்தாய்ந்திருந்தது.

தமிழ்நாடு அரசு வழக்கில் அதற்கான காலக்கெடு என்பது நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மாநில சுயாட்சி, மத்திய - மாநில அரசுகளின் அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட அனைத்தையும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே ஆய்வு செய்திருக்கிறது.
பஞ்சாப் வழக்கில் மூன்று நீதிபதிகள் அமர்வும், தமிழ்நாடு, தெலங்கானா வழக்குகளில் இரண்டு நீதிபதிகள் அமர்வும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
எனவே, இதில் புதிதாக விசாரிக்க எதுவும் இல்லை. இந்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இதை விசாரிப்பது என்பது தேவையில்லாதது.
ஏற்கனவே, குஜராத் சட்டப்பேரவை தொடர்பான சில வழக்குகளில் குடியரசுத் தலைவர் கேள்வியெழுப்பியபோது அவை திருப்பியனுப்பப்பட்டன.
அதேபோல இதில் குடியரசுத் தலைவர் அனுப்பிய கடிதத்தை அவருக்கே திருப்பி அனுப்ப வேண்டும்" என வாதங்களை முன்வைத்தார்.
அவரைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, "குடியரசுத் தலைவர் கேட்டிருக்கும் அனைத்து கேள்விகளுக்கும் முந்தைய தீர்ப்புகளில் தெளிவான பதில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
எனவே, அரசியலமைப்பு சட்ட விதிமுறைகளின்படி இந்தக் கடிதத்தை அவருக்கே திருப்பியனுப்ப வேண்டும். குடியரசுத் தலைவரின் கேள்விகள் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்குவதாக இருக்கிறது.
இந்த விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்திருக்க வேண்டிய மத்திய அரசு, அதைத் தவிர்ப்பதற்காக குடியரசுத் தலைவர் கடிதம் என்ற பெயரில் மீண்டும் மறு விசாரணையை ஏற்படுத்தியிருக்கிறது" என்று கூறினார்.
அப்போது பேசிய நீதிபதிகள், "தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்ச நீதிமன்றம் முன்பாகப் பிறப்பித்த உத்தரவை நாங்கள் மறு ஆய்வு செய்யவில்லை, மாறாக எந்த அடிப்படையில் அந்த தீர்ப்பு வழங்கப்பட்டது எனக் குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்குத்தான் பதில் அளிக்க நினைக்கிறோம்" என்றார்கள்.

அதையடுத்து, மத்திய அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி, "அரசியலமைப்பு செயல்பாடுகள் தொடர்பான பிரச்னைகள் ஏதேனும் இருந்தால், அது குறித்து குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுத அதிகாரம் இருக்கிறது.
இந்த விவகாரத்தைப் பொருத்தவரை ஆளுநர், குடியரசுத் தலைவர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பான அரசியலமைப்பு கேள்வி எழுந்துள்ளதால்தான் குடியரசுத் தலைவர் இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறார்.
நீதிமன்ற வழிகாட்டுதலை எதிர்பார்த்துதான் குடியரசுத் தலைவர் இந்தக் கடிதத்தை எழுதி இருக்கிறார். எனவே, இது விசாரணைக்கு உகந்தது.
`ஒரு மசோதா மீது மூன்று மாதத்தில் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் எனக்கு காலக்கெடு விதித்திருக்கிறது. அவ்வாறு செய்ய உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறதா?' எனக் குடியரசுத் தலைவர் கேட்டிருக்கிறார்.
அதற்கு உச்ச நீதிமன்றம் பதில் அளிக்கலாம். எனவே, குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்ட கடிதத்தை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானதாகக் கருத வேண்டிய அவசியம் கிடையாது.
மேலும், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றமானது, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரங்களைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது.

பேப்பர் பேனாவை எடுத்துக்கொண்டு அரசியல் சாசனத்தைத் திருத்தும் அளவிற்குச் சென்று இருக்கிறது.
ஏற்கனவே இருக்கக்கூடிய அரசியல் சாசன சரத்துகளைப் புறந்தள்ளும் வகையில் நீதிமன்றம் தனக்கு இருக்கும் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது" என வாதங்களை முன்வைத்தார்.
பின்னர், இன்றைய அலுவல் நேரம் முடிந்ததும், வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.