ரஷியாவில் ஜெய்சங்கர்! இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை
கண்டன அறிக்கைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை: ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் சங்கம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவிப்பதாக வெளியான அறிக்கைக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம், சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று (ஆக. 18) இரவு வேலூர் மாவட்டத்துக்குட்பட்ட அணைக்கட்டு தொகுதியில் மக்கள் மத்தியில் பேசினார். அப்போது குறுகிய தெரு வழியாக ஆம்புலன்ஸ் வாகனம் வந்தது.
இது தொடர்பாக கருத்து தெரித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக பிரசாரத்தில் ஆளில்லா ஆம்புலன்ஸ் அனுப்பி ஒவ்வொரு கூட்டத்திலும் தொடர்ச்சியாக மக்களை சிரமத்துக்கு உள்ளாக்கும் வேலையை திமுக அரசு செய்வதாக குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், ஆம்புலன்ஸ் வாகன பதிவு எண்ணை குறித்து வைத்து ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
எடப்பாடி பழனிசாமியின் இத்தகைய பேச்சுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சங்கம் கண்டனம் தெரிவிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவிப்பதாக வெளியான அறிக்கைக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வேலூரில் அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, 108 ஒட்டுநரை வழி மறித்து அவரை மிரட்டும் வகையில் பேசியதாகவும் அதற்கு அவர் மன்னிப்பு கேட்கவில்லையெனில் நாடு தழுவிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என்ற பெயரில் கண்டன அறிக்கையானது சங்கத் தலைவரின் பெயரையும், எங்களது சங்க லெட்டர் பேடை தவறாகவும், அவதூறாகவும் பயன்படுத்தி கண்டன அறிக்கையினை வெளியிட்டு உள்ளனர்.
மேற்கண்டபடி, எந்தவொரு கண்டன அறிக்கையையும் எங்களது சங்கத்தின் சார்பாகவோ, தலைவரோ யாதொரு ஊடகத்திற்கும் அறிக்கையோ, பேட்டியோ கொடுக்கவில்லை.
அப்படி இருக்கையில் எங்களது சங்கத்தின் பெயரை பயன்படுத்தி பொய்யான தகவல்களை யாரோ வழங்கியுள்ளனர். இந்த கண்டன அறிக்கைக்கும் எங்களது சங்கத்திற்கும் எந்தவித சம்பந்தமுமில்லை.
எங்களது சங்கமானது தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களின் நலனுக்காக மட்டுமே செயல்படும் சங்கமாகும். இது ஒரு அரசியல் சாராத இயக்கம் ஆகும்.
ஆகவே, ஊடக நண்பர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இந்த செய்தியை ஒளிபரப்பு செய்ய வேண்டுமெனவும், அதளை உடனே நீக்கம் செய்ய வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், இந்த தவறான செயல்களை செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறையின் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | எதேச்சதிகாரத்துக்கு எதிராக சுதர்சன் ரெட்டி சரியான தேர்வு: மு.க. ஸ்டாலின்