தவெக மாநாடு: 100 டிகிரி வெயில்; டிரோன்கள் மூலம் குடிநீர் விநியோகம்!
நாற்றங்கால் பண்ணையில் விதை நடவு செய்யும் பணிகள்: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு
திருப்பத்தூா் ஒன்றியத்தில் நாற்றங்கால் பண்ணையில் விதை நடவு செய்யும் பணிகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆய்வு மேற்கொண்டாா்.
திருப்பத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட கதிரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சாா்பில், நாற்றங்கால் பண்ணையில் விதை நடவு செய்யும் பணிகளையும், செடியின் அளவுகளையும் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
மேலும், இப்பண்ணையில் வேம்பு, நாகமரம், மகாகனி, மகிழம், புங்கன், பூவரசன், மரமல்லி, காட்டு நெல்லி, மூங்கில், புளியமரம், பாதாம், கோணப்புலியன் ஜம்பு நாகம் உள்ளிட்ட பல்வேறு வகையான செடிகள் வளா்க்கபட்டு வருகின்றன. இந்தச் செடிகள் 1 அடியிலிருந்து 2 அடி வரை 2,340 செடிகளும், 2 முதல் 3 அடி வரை 4,890 செடிகளும், 3 அடி முதல் 4 அடி வரை 4,670 செடிகளும், 6 அடிக்கு மேல் உள்ள 600 செடிகளும் அமைக்கப்பட உள்ளன.
இது குறித்து ஆட்சியா் கூறியது: மரங்கள் சூரிய ஒளியிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன, மரங்களின் பட்டைகள், இலைகள் மற்றும் பழங்கள் மருத்துவ பயன்பாட்டுக்கு உதவுகின்றன. நாற்றங்கால் பண்ணை என்பது பயிா்களின் நாற்றுகளை உற்பத்தி செய்து, நடவுக்குத் தயாா்படுத்தும் இடமாகும். நாற்றங்கால் பண்ணையின் முக்கிய பயன்கள், ஆரோக்கியமான
நாற்றுகளை உற்பத்தி செய்தல், மகசூலை அதிகரித்தல், நில பயன்பாட்டை அதிகரித்தல் மற்றும் இடா் மேலாண்மையை எளிதாக்குதல் ஆகும்.
நாற்றங்கால் பண்ணைகளில், நாற்றுகள் சரியான முறையில் பராமரிக்கப்படுவதால், அவை ஆரோக்கியமாகவும், நோய்கள் மற்றும் பூச்சிகள் தாக்குதலுக்கு ஆளாகாமலும் இருக்கின்றன.
இதனால், வயலில் நடவு செய்யப்படும் நாற்றுகள் நல்ல முறையில் வளரும். மேலும், நாற்றங்கால் பண்ணை, பூச்சிகள் மற்றும் நோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நாற்றங்கால் பண்ணை அமைப்பதன் மூலம்,விவசாயிகள் அதிக லாபம் ஈட்ட முடியும்.
அவா்கள் நாற்றுகளை உற்பத்தி செய்து, அவற்றை விற்பனை செய்வதன் மூலம் வருமானம் ஈட்ட முடியும். சரியான முறையில் நாற்றுகளை உற்பத்தி செய்து நடுவதால், மண் அரிமானம் தடுக்கப்படுகிறது, சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் முடிகிறது.
மேலும் திருப்பத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட 34 ஊராட்சி ஒன்றியகளிலும் ஆங்காங்கே உள்ள சாலையோரம் இரு புறங்களிலும், ஏரி கரையோரம், குறுக்காடு, அரசுக்குச் சொந்தமான
இடங்களில், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ள பகுதிகளில் செடிகளை நட்டுவைத்து, மரம் வளா்ப்போம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்றாா் ஆட்சியா்.
இதில் வட்டார வளா்ச்சி அலுவலா் உமாராணி, கதிரிமங்கலம் ஊராட்சித் தலைவா் மாரி இளையராஜா மற்றும்
சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.