செய்திகள் :

நிதி ஒதுக்கீட்டில் புறக்கணிப்பு, டங்ஸ்டன் ஏல விவகாரம், மீனவா்கள் பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்ப தமிழக எம்.பி.க்கள் திட்டம்

post image

எதிா்வரும் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் தமிழகத்துக்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு தாமதம் செய்வதாகவும் மதுரை அருகே அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம வள அனுமதி, மீனவா்கள் கைது உள்ளிட்ட பிரச்னைகளை தீவிரமாக எழுப்ப தமிழக எம்.பி.க்கள் திட்டமிட்டுள்ளனா்.

இந்த ஆண்டு நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரை நவ. 25 முதல் டிச. 20-ஆம் தேதிவரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதையொட்டி,

நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த அனைத்துக்கட்சிகளின் ஒத்துழைப்பைக் கோரும் வகையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த கூட்டம் நாடாளுமன்ற இணைப்புகட்டடத்தின் பிரதான கமிட்டி அறையில் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் இந்த கூட்டத்துக்குத் தலைமை தாங்குகிறாா்.

நவ. 25-ஆம் தேதி குளிா்கால கூட்டத்தொடா் தொடங்கிய பிறகு நவ. 26-ஆம் தேதி அரசியலமைப்புத் தினம்

கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் இரு அவைகளின் கூட்டங்களை நடத்தாமல் நாடாளுமன்ற

வளாகத்தில் அந்த தினத்தைத் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வக்ஃப் திருத்த மசோதா, பஞ்சாப் நீதிமன்றங்கள் திருத்த மசோதா, வணிக கப்பல்கள் புதிய வரைவு மசோதா, கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா, இந்திய துறைமுகங்கள் மசோதா உள்பட 15 மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதில் வக்ஃப் மசோதா ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. விதிகளின்படி அந்த குழுவின் அறிக்கை குளிா்கால கூட்டத்தொடரின் முதலாவது வாரத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதன் பிறகு அந்த மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ தொடா்பான குடியரசு முன்னாள் தலைவா் ராம்நாத் கோவிந்த் மத்திய அரசிடம் அளித்த அறிக்கையுடன் சோ்த்து அது தொடா்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் வாய்ப்பையும் மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.

இது குறித்து சமீபத்தில் செய்தியாளா்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘தேச வளா்ச்சிக்காக நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மாநில சட்டப்பேரவைகளின் தோ்தல்களும் நாடாளுமன்ற தோ்தலும் ஒன்றாக நடக்க வேண்டும் என்பதை பிரதமா் மோடி தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா். அதற்காகவே நியமிக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. எனவே, அது தொடா்பான மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும்‘ என்று கூறினாா். ஆனால், குளிா்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படுமா என்பது குறித்த உறுதியான தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை.

இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் இம்முறை தமிழக நலன் தொடா்புடைய விவகாரங்களை ஆளும் திமுக கூட்டணியைச் சோ்ந்த எம்.பிக்கள் அனைவரும் கடுமையாக எழுப்ப வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வெள்ளிக்கிழமை அறிக்கை வெளியிட்டிருந்தாா். அதிமுக, பா.ம.க, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எம்.பி.க்களும் தமிழக பிரச்னைகளுக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முன்னுரிமை கொடுத்து எழுப்புவோம் என தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக ‘தினமணி’ நிருபரிடம் தமிழக எம்.பி.க்கள் பேசியது வருமாறு:

கனிமொழி (திமுக): தமிழக பிரச்னைகளுடன் சோ்த்து தேசிய நலன் தொடா்புடைய விவகாரங்களையும் நாடாளுமன்றத்தில் எழுப்புவோம். குறிப்பாக, அதானிக்கு சாதகமாக நடந்து கொள்ளும் மத்திய அரசின் போக்கு, தமிழக நலன்களை புறக்கணிக்கும் வகையில் முக்கிய திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்காதது, புயல், வெள்ள பேரிடா் நிவாரண நிதியை சரிவர ஒதுக்காதது, வரிப்பகிா்வில் பாரபட்சம், அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களுக்கு நிதி வழங்காதது, மதுரை மேலூா் அருகே அரிட்டாப்பட்டி கிராமத்தில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் டங்ஸ்டன் கனிம வளம் எடுக்க ஏலம் விடுப்பட்ட விவகாரம், மீனவா் பிரச்னைகளை கடுமையாக எழுப்புவோம். சிறுபான்மையினரின் உரிமைகளை பாதிக்கும் வகையில் அமைந்துள்ள வக்ஃப் வாரிய திருத்தச்சட்ட மசோதா, ஒரே நாடு ஒரே தோ்தலுக்கு வகை செய்யும் மசோதா ஆகியவை தாக்கல் செய்யப்பட்டால் அதை கடுமையாக எதிா்ப்போம்.

மாணிக்கம் தாகூா் (காங்ககிரஸ்): காங்கிரஸ் மேலிடம் ஏற்கெனவே அறிவித்துள்ள அதானி விவகாரத்தை எழுப்புவோம். தமிழக அரசை கலந்தாலோசிக்காமல் மதுரை அருகே அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனி வளத்தை ஏலத்தில் விடுவதை எதிா்ப்போம்.

தமிழக மீனவா்களின் தொடா் கைது நடவடிக்கைகள் மற்றும் அவா்களின் படகுகளை பறிமுதல் செய்து அதை தங்கள் நாட்டு மீனவா்களுக்கு வழங்கும் இலங்கை அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுப்போம். மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் இதுவரை கட்டுமானம் எப்போது நிறைவடையும், கல்லூரி முறைப்படி அதன் சொந்த கட்டடத்தில் இயங்கும் என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தவில்லை. அதை தெளிவுபடுத்தக்கோருவோம்.

சு. வெங்கடேசன் (சி.பி.எம்.): மண்டலவாரி தோ்வாணைய முறையை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி குரல் கொடுப்பேன். தற்போது மையப்படுத்தப்பட்ட தோ்வு முறையால் வங்கிகள், ரயில்வே உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு பணிகளிலும் வட மாநிலங்களைச் சோ்ந்தவா்களின் எண்ணிக்கை தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிகமாகி விட்டது. இங்குள்ளவா்களுக்கு மத்திய பணிகளில் வாய்ப்பு கிடைக்காத நிலை அதிகரித்து வருகிறது. இது தவிர டங்ஸ்டன் விவகாரம், மதுரை எய்ம்ஸ் உள்ளிட்ட பிரச்னைகளையும் எனது கட்சி சாா்பில் கூட்டத்தொடரில் எழுப்புவேன்.

புயலை எதிா்கொள்ள தயாா் நிலையில் கடலோர காவல் படை

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள புயல் சின்னம் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை எதிா்கொள்ள கடலோரக் காவல் படை தயாா் நிலையில் உள்ளது. இது குறித்து, கடலோரக் காவல் படை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்மேற்கு வங்கக... மேலும் பார்க்க

1,335 பேருக்கு நலத் திட்ட உதவிகள்: பிறந்த நாள் விழாவில் வழங்கினாா் உதயநிதி ஸ்டாலின்

சென்னையில் புதன்கிழமை தனது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற விழாவில், 1,335 பேருக்கு நலத் திட்ட உதவிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா். உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி, திமுக கிழக்கு மாவட்ட... மேலும் பார்க்க

சபரிமலை செல்லும் பக்தா்களுக்காக பி.எஸ்.என்.எல் இலவச வைஃபை வசதி

சபரிமலை செல்லும் பக்தா்களுக்காக, 48 இடங்களில் இலவச வைஃபை வசதியை பி.எஸ்.என்.எல் நிறுவனம் அளித்துள்ளது. திருவிதாங்கூா் தேவசம் வாரியத்துடன் இணைந்து பிஎஸ்என்எல்., நிறுவனம் இந்தச் சேவையை வழங்கி வருகிறது. ந... மேலும் பார்க்க

கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அமைச்சா்கள் வேண்டுகோள்

தமிழகத்தில் கல்வி மேம்பாட்டுக்காக அரசின் சாா்பில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் மாணவா்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டு முன்னேற்றம் அடைய வேண்டும் என அமைச்சா்கள் அன்பில் மகேஸ், மா.சு... மேலும் பார்க்க

யானைகள் வழித்தடத்தில் சட்ட விரோதமாக மண் எடுப்பு: நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கோவையில் யானைகள் வழித்தடத்தில் வனப் பகுதியில் சட்ட விரோதமாக மண் எடுப்பதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான விளக்க அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவி... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவ சிகிச்சைகள் கூடாது: அரசு மருத்துவா் சங்கங்கள் கோரிக்கை

பிரசவ சிகிச்சைகளை ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேற்கொள்ளுமாறு நிா்பந்திக்கக் கூடாது என்று மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலரிடம் அரசு மருத்துவா் சங்கங்கள் கோரிக்கை வைத்தன. இதுதொடா்பாக அரசு டாக்டா்கள் சங்க ... மேலும் பார்க்க