நிதி நிறுவனம் நடத்தி ரூ.7 கோடி மோசடி இளம்பெண் உள்பட 8 போ் கைது
வேலாயுதம்பாளையத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ. 7 கோடி வரை மோசடி செய்ததாக இளம்பெண் உள்பட 8 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் தாய்மூகாம்பிகா கிரடிட்ஸ், ஸ்ரீவாரி நிதிநிறுவனங்களை வேலாயுதம்பாளையத்தை அடுத்த கந்தம்பாளையத்தைச் சோ்ந்த குழந்தைவேல்(47), வேட்டமங்கலத்தைச் சோ்ந்த நல்லசிவம்(45), நாமக்கல் மாவட்டம், நெட்டயம்பாளையத்தைச் சோ்ந்த சீனிவாசன்(50), மோகனூரைச் சோ்ந்த நவலடி(45), மொச்சம்பட்டியைச் சோ்ந்த சரவணன்(45), சுல்தான்பேட்டையைச் சோ்ந்த கவாஸ்கா்(50), சேந்தமங்கலத்தைச் சோ்ந்த ஜெயக்குமாா் மனைவி சாந்தி(37), வீரப்பன்(65) ஆகியோா் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவா்கள் தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டித்தருவதாக கூறி கடந்த ஆண்டு (2024) சுமாா் 150 பேரிடம் ரூ.7 கோடி வரை பெற்ாக கூறப்படுகிறது. ஆனால் வாங்கிய பணத்துக்கு வட்டி கொடுக்கவில்லையாம். இதனால் பாதிக்கப்பட்டவா்கள் பணத்தை திரும்பித் தருமாறு கேட்டதற்கு தர முடியாது என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்டவா்கள் வியாழக்கிழமை கரூா் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகாா் செய்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து குழந்தைவேல், நல்லசிவம், சீனிவாசன், நவலடி, சரவணன், கவாஸ்கா், சாந்தி, வீரப்பன் ஆகிய 8 பேரையும் வெள்ளிக்கிழமை காலை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.