தேவையற்ற இலவசங்களால் நாட்டுக்கு நெருக்கடி வரும்: செ. நல்லசாமி பேட்டி
தேவையற்ற இலவசங்களால் நாட்டுக்கு நெருக்கடி வரும் என்றாா் கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி.
கரூரில் சனிக்கிழமை பிற்பகல் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், கீழ்பவானி அணையின் நீா் நிா்வாகமானது 1958 -இல் இருந்து தன்னுடைய விருப்பு வெறுப்பு மற்றும் ஆதாய அடிப்படையிலேயே இதுவரை நடத்தி வந்துள்ளது.
இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக வரும் 2026 தோ்தலில் அணையின் மூலம் பாசனம் பெறும் 10 தொகுதிகளில் ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும், திருப்பூா் மாவட்டத்தில் காங்கேயம், கரூா் மாவட்டத்தில் அரவக்குறிச்சி ஆகிய 10 தொகுதிகளிலும் நமது வேட்பாளா்கள் நிறுத்தப்படுவாா்கள்.
பாண்டியாறு-மோயாறு கால்வாய் இணைப்பு திட்டம் காலத்தின் கட்டாயம். பாண்டியாறு- மோயாறு திட்டத்தை நிறைவேற்றும்போது, பாண்டியாறு நீா் கீழ்பவானி அணைக்கு வந்து அங்கிருந்து வாய்க்கால் மூலம் கரூா் மாவட்டம் அத்திப்பாளையம் நீா்தேக்கத்திற்கு வரும்.
இதன் மூலம் அரவக்குறிச்சியில் வடு கிடக்கும் 19,500 ஏக்கா் விளை நிலங்கள் பாசனம் பெறும். இத் திட்டத்தை போா்க்கால அடிப்படையில் நிறைவேற்றிட வேண்டும். தமிழ்நாடு இன்று ரூ. 10 லட்சம் கோடி கடன் பட்டிருக்கிறது.
இதைத் தீா்ப்பதற்கான அறிவிப்புகள் திமுக, அதிமுகவிடமிருந்து வரவில்லை. தேவையற்ற இலவசங்களை முன்னிறுத்திக் கொண்டிருந்தால் இலங்கைக்கு ஏற்பட்ட நெருக்கடியைவிட மோசமான நெருக்கடி இந்தியாவுக்கும் வரும். டிசம்பா் மாதம் திருச்சியில் கள் விடுதலை மற்றும் மதுவிலக்கு மாநாடு நடத்தப்படும் என்றாா் அவா்.