மேற்கு வங்கம்: இடதுசாரிகள்-திரிணமூல் காங்கிரஸ் மாணவரணி இடையே கடும் மோதல்: பலா் க...
`நிம்மதியா நடிக்கக்கூட முடியலை, பத்து நாளா மன உளைச்சல்ல இருக்கேன்’ - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஸ்டாலின்
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முதல் சீசனில் மூர்த்தியாக வந்து சீரியல் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தவர் ஸ்டாலின். முதல் சீசன் ஹிட் ஆனதால் தற்போது இரண்டாவது சீசனிலும் தொடர்கிறார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் சைபர் கிரைம் போலீஸில் புகார் ஒன்றை இவர் தந்திருப்பதாகத் தெரியவர, சீரியலின் ஷூட்டிங்கில் இருந்தவரைத் தொடர்பு கொண்டு பேசினோம்.
`பத்து நாட்களா ரொம்பவே அப்செட்’
'சொந்த ஊர் தேனி சார். வீட்டுல முக்கால்வாசிப் பேர் வாத்தியார் வேலையில இருந்தாங்க. நானும் ஒரு வாத்தியாராத்தான் ஆவேன்'னு நம்பினாங்க. ஆனா நமக்கு அந்த வேலை சரிப்பட்டு வரலை. டைரக்டர் பாரதி ராஜா தூரத்துச் சொந்தக்காரர். அவரைப் பார்த்து நடிப்பாசை வந்திடுச்சு. சீரியல், சினிமான்னு இந்தப்பக்கம் வந்துட்டேன்.
'தெக்கத்திப் பொண்ணு', 'ஆண்டாள் அழகர்', 'சரவணன் மீனாட்சி' னு பல சீரியல்களும் சில படங்களுமே வந்திடுச்சு. 'இதுல 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடர் முதல் சீசன் ஹிட் ஆனதால இப்ப 2-வது சீசன். தொடர் நல்லபடியா போயிட்டிக்கு. ஷூட்டிங் இருந்தா சென்னையிலும் இல்லாத நாட்கள்ல தேனியிலுமா என் நாட்கள் போயிட்டிருக்கு. அங்க ஊர்ல சின்ன அளவுல விவசாயமும் நடக்குது. இப்படி எம்பாட்டுக்கு இருக்கிறவன் கடந்த பத்து நாட்களா ரொம்பவே அப்செட் மனநிலையில இருக்கேன்'' என்றபடி அந்த விவகாரம் குறித்த டாபிக் வந்தார்..
`அந்த நடிகையே எனக்கு போன் பண்ணி வேதனைப்பட்டாங்க’
''என்னை மாதிரியே எங்க ஊர்ப்பக்கமிருந்து வந்து சீரியல்கள்ல நடிச்சிட்டிருக்கிறவங்க அந்த நடிகை. கொஞ்ச நாள் முன்னாடி எங்க ரெண்டு பேரையும் சேர்த்து 'தம்பதியான எங்களுக்கு இன்னைக்குத் திருமண நாள்.. வாழ்த்துங்களேன்'னு ஃபேஸ்புக்ல ஒரு போஸ்ட். ரெண்டு பேருமே ஒரே சேனல்ல நடிச்சிட்டு வர்றதால அவார்டு ஃபங்ஷன் மாதிரியான நிகழ்ச்சிகளுக்காக ஒரே இடத்துல கூடியிருப்போம். அப்ப ஆர்ட்டிஸ்டுகள் சேர்ந்து ஃபோட்டோ எடுத்துக்கிடறது சகஜமான ஒண்ணு.

இப்படி எங்கேயோ நானும் அவங்களும் சேர்ந்து எடுத்த ஃபோட்டோவை வச்சு, எங்களை கணவன் மனைவியா முடிவு செய்து போட்டு விட்டிருக்கான் ஒருத்தன். அந்த போஸ்டுக்கு ஆயிரக்கணக்கான லைக் ஷேர் வேற. போஸ்ட்டை பார்த்த என்னுடைய நெருங்கிய நண்பர்கள் சிலர்தான் எனக்கு அனுப்பி வச்சிருந்தாங்க. நிறையப் பேர் போன் போட்டு 'என்னப்பா இது'னு கேக்கத் தொடங்கிட்டாங்க. நாலு நாளா எனக்கு இது தொடர்பா வந்திட்டிருந்த ஃபோன் கால்களால் நிம்மதியா நடிக்க முடியலை. உச்சமா சம்பந்தப்பட்ட அந்த நடிகையே எனக்கு போன் பண்ணி வேதனைப்பட்டாங்க. எனக்கு வந்த அதே விசாரிப்புகள் அவங்களுக்கும் வந்து தூங்க விடாமப் பண்ணியிருக்கு.
`நடவடிக்கை எடுக்கறோம்னு சொல்லியிருக்காங்க’
ரெண்டு பேருக்கும் தனித்தனி குடும்பம் இருக்கு. எனக்கு வளர்ந்த பையங்கள் இருக்காங்க. அவங்களைப் பொறுத்தவரை பேரன் பேத்தி எடுத்துட்டாங்க. இப்படி இருக்கிற சூழல்ல பொறுப்பில்லாம ஒருத்தன் பண்ற வேலையைப் பாருங்க. ரெண்டு பேர் குடும்பத்துல இருக்கிறவங்களுக்குமே இது எவ்வளவு கஷ்டத்தைக் கொடுத்திருக்கும்னு யோசிச்சுப் பார்க்குறாங்களா, இந்த மாதிரியான வேலையைச் செய்யறவங்க?
சரி, ஏதோ ஒரு தகவலை விளையாட்டாச் செய்றாங்கன்னு வச்சாலும், அந்த போஸ்ட்டுக்குக் கீழேயே 'இவங்க ரியல் புருஷன் பொண்டாட்டி இல்லை'னு சிலர் சொல்றாங்களே, அதைப் பார்த்த பிறகாவது திருந்தி போஸ்ட்டை டெலீட் செய்ய வேண்டாமா?
அதையும் செய்யாம, திரும்ப ரெண்டாவது போஸ்ட்டையும் போடுறான்.

இது மன ரீதியா பிரச்னை இருக்கிறவன் வேலையாத்தான் இருக்கும்னு புரிஞ்ச பிறகுதான் சைபர் கிரைம்க்குப் பேசினேன். 'செலிபிரிட்டி'ன்னா இதை மாதிரி நிறையப் பேர் பண்ணுவாங்க, முதல்ல சொன்னாலும், என் கோபத்தைப் புரிஞ்சுகிட்டு நடவடிக்கை எடுக்கறோம்னு சொல்லியிருக்காங்க.
இதுல என்ன பெரிய கொடுமைன்னா, எங்க ஊர்ப்பக்கம் யூ டியூப் சேனல் வச்சிருக்கிற ஒரு நபர்தான் தொடர்ந்து இதே மாதிரியான பதிவுகளைப் போட்டுட்டு வர்றான். ஒரு விஷயத்தை எல்லாரும் புரிஞ்சுக்கணும். நடிகர் நடிகைகள்னாலே கிசுகிசுக்கள்ல இருந்து தப்பிக்கவே முடியாது. இப்படியிருக்க தப்பான ஒரு தகவலை வேணும்னே வெறும் பரபரப்புக்காகவும் விளம்பரத்துக்காகவும் தொடர்ந்து பண்றப்ப, 'ஒருவேளை இது நிஜமா இருக்குமோ'னு சிலரை நினைக்கத் தூண்டும்.
கடைசியில வதந்தி பரப்புகிற கூட்டம் இதையே வதந்தியா பரப்பி விடும். அது நிஜமில்லீங்க, தப்பான தகவல்னு கூவிக் கூவி எல்லாருக்கும் நாங்க விளக்கம் தந்திட்டிருக்கணும். தேவையா எங்களுக்கு இது? அதனாலதான் கோபம் கோபமா வருது'' என்றவர் இன்னும் சில தினங்கள் பார்ப்பேன், சம்பந்தப்பட்ட அந்த பதிவு நீக்கப்படலைன்னா சீரியஸா இந்த விவகாரத்தைக் கையாளலாம்னு இருக்கேன்'' என்கிறார் கோபத்துடன்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
