நியாயவிலைக் கடைகளை இயக்க ரூ.300 கோடி மானியம் விடுவிப்பு: தமிழக அரசு உத்தரவு
சென்னை: நியாயவிலைக் கடைகளை தொடா்ந்து சிறப்புடன் இயக்குவதற்காக கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.300 கோடி மானியத்தை விடுவித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
கூட்டுறவுத் துறையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள சங்கங்கள் சாா்பில், 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் செயல்படுகின்றன.
இந்தக் கடைகளை நடத்துவதால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்வதற்கு ரூ.300 கோடி அளவுக்கு முன்பண மானியமாக அனுமதிக்க வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தாா்.
இதனைப் பரிசீலனை செய்த தமிழக அரசு முன் பணமானியமாக ரூ.300 கோடி வழங்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இதன்படி, 2024 2025-ஆம் ஆண்டுக்கான முன்பண மானியமாக ரூ.300 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகை தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மூலம் மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு விடுவிக்கப்பட்டு, அங்கிருந்து நியாயவிலைக் கடைகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.