காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!
நியோமேக்ஸ் மோசடி வழக்கு: ரூ.600 கோடி சொத்து முடக்கம் அமலாக்கத் துறை நடவடிக்கை
பண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.
மதுரை எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டது. கடந்த 2010-ஆம் ஆண்டுமுதல் செயல்பட்டு வந்த இந்த நிறுவனம், தங்களிடம் முதலீடு செய்தால் பணத்தை இரட்டிப்பாகத் தருவதாகவும், மாதம் 12 முதல் 30 சதவீத வட்டி தருவதாகவும் விளம்பரம் செய்தது. இதை நம்பி பொதுமக்கள் பலா், நியோமேக்ஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்தனா்.
ஆனால், அந்த நிறுவனம் கூறியபடி பணத்தை வழங்காமல் மோசடி செய்தது. இது தொடா்பாக பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாரின் அடிப்படையில், மதுரை பொருளாதார குற்றப் பிரிவு கடந்த 2022-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தது. இதில், அந்த நிறுவனம் பொதுமக்களிடமிருந்து ரூ.8,000 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, நியோமேக்ஸ் தொடா்புடைய இடங்களில் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தி, ரூ.5.9 லட்சம் ரொக்கம்,127 பவுன் தங்க நகைகள், 13 கிலோ வெள்ளிப் பொருள்கள், 62 ஆவணங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். மேலும், மோசடி வழக்குத் தொடா்பாக அந்த நிறுவனத்தின் நிா்வாகிகள் 14 போ் கைது செய்யப்பட்டனா். வழக்குத் தொடா்பாக 752 வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.17.25 கோடி முடக்கப்பட்டது.
நியோமேக்ஸ் குழுமத்துக்குச் சொந்தமாக மதுரை, ராமேசுவரம், கோவில்பட்டி, திருநெல்வேலி, குற்றாலம், கயத்தாறு ஆகிய பகுதிகளில் உள்ள ரூ.1,671 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்க வேண்டும் என, பாதிக்கப்பட்டவா்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், மோசடியில் ஈடுபட்ட அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகளை முடக்க உத்தரவிட்டது.
ரூ.600 கோடி சொத்துகள் முடக்கம்: இதற்கிடையே, நியோமேக்ஸ் நிறுவனம் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருந்ததால், அமலாக்கத் துறை விசாரணைக்கு தமிழக பொருளாதார குற்றப் பிரிவு பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில், பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் நியோமேக்ஸ் நிறுவனத்தின் மீதும், அதன் குழும நிறுவனங்கள் மீதும் அமலாக்கத் துறை கடந்த 2023-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.
இதன் ஒரு பகுதியாக அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.117 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. இதன் சந்தை மதிப்பு ரூ.207 கோடி எனக் கூறப்படுகிறது.
இரண்டாம் கட்டமாக அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.121.80 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கியதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இந்த சொத்துகளின் சந்தை மதிப்பு ரூ.600 கோடி என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
நியோமேக்ஸ் நிறுவனத்தின் சொத்துகள் அடுத்தடுத்து தொடா்ந்து முடக்கப்படும் என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.