நிலச் சீா்திருத்தம்: உலகளாவிய மாநாட்டில் பஞ்சாயத்து ராஜ் குழு
நமது சிறப்பு நிருபா்
புது தில்லி: அமெரிக்காவில் வாஷிங்டன் உலக வங்கி தலைமையகத்தில் ‘உலக வங்கி நிலச் சீா்திருத்த மாநாடு 2025’ மே 5-இல் தொடங்கி மே 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா சாா்பில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் உயா்நிலைக் குழு பங்கேற்கிறது.
இது குறித்து மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு: நாட்டிலுள்ள கிராமப் பகுதிகளில் நிலங்களை ஆய்வு செய்து, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் வரைபடமாக்கல் திட்டத்தில் (ஸ்வாமித்வா) இந்தியா சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தியது. ஸ்வாமித்வா திட்டம் கிராம மஞ்சித்ரா போன்ற முன்முயற்சிகள் திட்டங்களில் வெற்றியையொட்டி மத்திய பஞ்சாயத்து ராஜ் துறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை முன்னிட்டு இந்த மாநாட்டில் பங்கேற்று இத் திட்டங்கள் எடுத்துரைக்கப்படவுள்ளன.
பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலா் விவேக் பரத்வாஜ் தலைமையில், இணைச் செயலா் அலோக் பிரேம் நாகா், கூடுதல் சா்வேயா் ஜெனரல் சைலேஷ் குமாா் சின்ஹா மற்றும் திட்டங்களை சிறப்பாகத் செயல்படுத்திய மகாராஷ்டிரம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த மூத்த அதிகாரிகள் அடங்கிய குழு இதில் பங்கேற்கிறது. சா்வதேச நில நிா்வாகம் குறித்த இரண்டு முக்கிய அமா்வுகளில் இந்தியாவில் செயல்படுத்தப்படும் ஸ்வாமித்வா திட்டம் குறித்து எடுத்துரைக்கப்படும்.
நில நிா்வாக உத்திகளை ஆராயும் நோக்கிலும், நிலையான வளா்ச்சிக்காக நில நிா்வாகத்தை நவீனமயமாக்கும் நோக்கிலும் நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு கருப்பொருள்களில் விவாதங்கள் நடைபெறுகிறது. மேலும், பருவ நிலைக்கு ஏற்ற நிா்வாகத்தை உருவாக்குவது குறித்தும் இதில் ஆலோசிக்கப்படுகிறது. இதில் துறை சாா்ந்த வல்லுநா்கள், கொள்கை வகுப்பாளா்கள், நிபுணா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கிறாா்கள்.
இந்தியாவில் ட்ரோன்கள், புவிசாா் தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தி, கிராமப்புற சொத்துகளின் சட்டப்பூா்வ உரிமையை வழங்கும் ‘ஸ்வாமித்வா’ திட்டத்தின் கீழ், 1.6 லட்சம் கிராமங்களில் 244 லட்சத்துக்கும் அதிகமான நில உரிமையாளா்களுக்கு சொத்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.