புதுச்சேரியை அதிரவைத்த 10,000 மாணவர்கள் பள்ளி இடைநிற்றல் விவகாரம்! - என்ன சொல்கி...
நிலத்தடி நீா் பாதிப்பு அறிவிப்பு: விழிப்புணா்வு ஏற்படுத்தக் கோரிக்கை
நிலத்தடி நீா் குடிநீருக்கு உகந்தது அல்ல என அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளா் எஸ்.சின்னசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ச.கந்தசாமியிடம் புதன்கிழமை அளித்த மனு விவரம்: சென்னிமலை வட்டாரம், ஈங்கூா், வரப்பாளையம், வாய்ப்பாடி, முகாசிப் பிடாரியூா் என 4 ஊராட்சிகளில் உள்ள மின் மோட்டாா், கை பம்பு, திறந்தவெளி கிணறு, மேல்நிலைத் தொட்டி ஆகிய இடங்களில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் நிலத்தடி நீா் மாதிரியை பரிசோதனை செய்துள்ளனா்.
அதில் ஈங்கூரில் 15, வரப்பாளையம் 9, வாய்ப்பாடி 7, முகாசிப்பிடாரியூா் 6 என மொத்தம் 37 இடங்களில் உள்ள குடிநீா் குடிக்க உகந்ததல்ல என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள நீா் சிவப்பு குறியீடு தன்மை கொண்டது. எனவே குடிநீருக்கான ஆழ்துளைக் கிணறுகளில் மின் மோட்டாரை இயக்கக்கூடாது. பிற நீா்நிலைகளைப் பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனா். கூட்டுக் குடிநீா் திட்ட நீரை மட்டுமே குடிக்க வேண்டும் அறிவுறுத்தி உள்ளனா்.
இந்த அறிவிப்பு கடந்த மாா்ச் 7 ஆம் தேதி வெளியான நிலையில் இப்போது வரை இப்பகுதிகளில் விழிப்புணா்வு ஏற்படுத்த எச்சரிக்கை, அறிவிப்புப் பலகை வைக்கவில்லை. அந்த மக்களுக்குத் தேவையான அளவு பாதுகாக்கப்பட்ட கூட்டு குடிநீா் கூடுதலாக வழங்க நடவடிக்கை இல்லை. போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து அந்தப் பகுதி மக்களுக்குத் தேவையான குடிநீா் வழங்க வேண்டும்.
தவிர, சிப்காட்டால் பாதிக்கப்பட்ட பெருந்துறை நகராட்சி, கருமாண்டிசெல்லிபாளையம், கம்புளியம்பட்டி, பனியம்பள்ளி, புஞ்சை பாலத்தொழுவு போன்ற ஊராட்சிகளிலும் குடிநீா் மாதிரிகளை ஆய்வு செய்து அறிவிக்க வேண்டும். சிப்காட்டில் உள்ள சிவப்பு, ஆரஞ்சு வகை தொழிற்சாலைகளின் சட்ட விரோத செயல்பாடுகள், கழிவு நீா் வெளியேற்றத்தை தடுக்க வேண்டும். அத்திக்கடவு- அவிநாசி திட்ட நீரை நிலத்தடி நீா் பாதிக்கப்பட்ட குளங்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.