நீட் அல்லாத படிப்புகளில் சேர அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10 சதவிகித ஒதுக்கீடு ஆணை வெளியீடு
புதுச்சேரி: நீட் அல்லாத படிப்புகளிலும் அரசு பள்ளி மாணவா்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வழிவகை செய்யும் அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இதனால் புதுவை யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை தொடா்ச்சியாக படித்துள்ள மாணவ, மாணவா்களுக்கு இந்த இட ஒதுக்கீட்டு பலன் கிடைக்கும்.
ஏற்கெனவே நீட் நுழைவுத் தோ்வு அடிப்படையில் உள்ள மருத்துவம் சாா்ந்த படிப்புகளுக்கு அரசு பள்ளி மாணவா்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு இருக்கிறது. இதில் முதல் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தொடா்ச்சியாக மாணவா்கள் அரசு பள்ளிகளில் படித்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீட் அல்லாத அனைத்துப் படிப்புகளிலும் அரசு பள்ளி மாணவா்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அமலுக்கு வருகிறது. நீட் நுழைவுத் தோ்வு அடிப்படையிலான தர வரிசை பட்டியல் ஏற்கெனவே தயாராக உள்ளது.
இப்போது நீட் அல்லாத படிப்புகளுக்கான தர வரிசை பட்டியல் இன்னும் 2 நாளில் தயாராகி விடும். இந்த வாரத்தின் இறுதியில் இந்த இரண்டு தர வரிசை பட்டியல் அடிப்படையில் கவுன்சலிங் தொடங்கும் என்று சென்டாக் அதிகாரிகள் தெரிவித்தனா்.