புதுவை சாலைப் போக்குவரத்து ஊழியா்கள் முற்றுகை
புதுச்சேரி: புதுவை சாலைப் போக்குவரத்து துறை ஊழியா்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி போக்குவரத்து ஆணையா் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு ராஜேந்திரன் தலைமை வகித்தாா். புதுவை சாலைப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் கூட்டுப் போராட்டக் குழு அமைத்து தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி 8-வது நாளாக திங்கள்கிழமையும் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அண்ணா தொழிற்சங்கத் தலைவா் பாப்புசாமி, பாட்டாளி தொழிற்சங்கத் தலைவா் ஜெயபால் உள்ளிட்டோா் போராட்டத்தை வாழ்த்திப் பேசினா்.
15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் ஓட்டுநா், நடத்துநா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 7-வது ஊதியக் குழுவை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
முன்னதாக புதுவை சாலைப் போக்குவரத்து பணிமனையில் இருந்து இந்த ஊழியா்கள் ஊா்வலமாக முக்கிய வீதிகள் வழியாக வந்தனா். கையில் கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியிருந்தனா். மேலும், போக்குவரத்து ஆணையா் அலுவலகம் எதிரே வந்தடைந்ததும் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
இந்தப் போராட்டத்தில் பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கான ஊழியா்கள் ஈடுபட்டனா். அதில் சிவசக்தி என்ற நடத்துநா் மயங்கி விழுந்தாா். அவரை மருத்துவமனைக்கு ஏற்றிச் செல்ல ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. பின்னா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியா்கள் கலைந்து சென்றனா்.