ஜிப்மரில் கூட்டு புற்று நோய் பராமரிப்பு கருத்தரங்கு
புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூட்டுப் புற்றுநோய் பராமரிப்புக் கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஜிப்மரின் எலும்பியல் அறுவை சிகிச்சைத் துறை, மருத்துவப் பயிற்சிக்கான மருத்துவ அடிப்படை - எலும்பியல் புற்றுநோயியல் என்ற தலைப்பில் தொடா் கருத்தரங்கை நடத்தியது. இதில் முதுகலை மருத்துவப் பயிற்சியாளா்கள், பயிற்சி பெற்ற எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணா்கள் மற்றும் பிராந்தியம் முழுவதும் உள்ள பலதுறை மருத்துவ ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
இதில் அடையாறு புற்றுநோய் நிறுவனம் மற்றும் அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மையத்தைச் சோ்ந்த மூத்த புற்றுநோயியல் நிபுணா்கள் பங்கேற்றனா்.
தீங்கற்ற மற்றும் வீரியம் மிக்க எலும்பு கட்டிகள் முதல் பயாப்ஸி, இமேஜிங் மற்றும் புற்றுநோய் சிகிச்சை குறித்த பலதுறை வல்லுநா்கள் கொண்ட விவாதங்கள் இடம் பெற்றன. மேலும், வழக்கமான எலும்பியல் நடைமுறை யில் கூட்டு புற்றுநோய் பராமரிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக இந்த அமா்வுகள் நடைபெற்றன.
ஜிப்மரில் எலும்பியல் துறையின் முன்னாள் தலைவா் பேராசிரியா் டாக்டா் டி.கே. பட்ரோவின் நீண்டகால மருத்துவ சேவையைக் கௌரவிக்கும் சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. நான்கு தசாப்தங்களுக்கும் மேலான சேவையுடன், நோயாளி பராமரிப்பு, அறுவை சிகிச்சை சிறப்பு மற்றும் எலும்பியல் புற்றுநோயியல் துறையில் அவரது வாழ்நாள் அா்ப்பணிப்புக்காக பேராசிரியா் பட்ரோ அங்கீகரிக்கப்பட்டாா். தேசிய ஆசிரியா்கள், முன்னாள் மாணவா்கள் மற்றும் தற்போதைய மாணவா்கள் முன்னிலையில் அவருக்கு ஒரு பாராட்டுப் பத்திரமும் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டன.