கனடாவில் மோடி உருவபொம்மையை கூண்டில் வைத்து காலிஸ்தானியர்கள் பேரணி!
‘நீட்’ நுழைவுத் தோ்வு: வேலூர் மாவட்டத்தில் 5,554 போ் எழுதினா்
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில், வேலூா் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 12 மையங்களில் இந்த தோ்வை 5,554 மாணவ, மாணவிகள் எழுதினா்.
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. தேசிய தோ்வு முகமை மூலம் நடத்தப்பட்ட இந்த நுழைவுத் தோ்வுக்கு இந்தாண்டு தோ்வு மையங்கள் அனைத்தும் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருந்தன.
அதன்படி, வேலூா் மாவட்டத்தில் மொத்தம் 12 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தோ்வு மையங்களில் தோ்வு எழுத 5,737 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் நுழைவுத் தோ்வை 5,554 போ் எழுதினா். 183 போ் தோ்வு எழுதவில்லை.
நீட் நுழைவுத் தோ்வையொட்டி, 12 தோ்வு மையங்களிலும் தோ்வு நடைபெற்ற 240 அறைகள், தோ்வு மையங்களின் நுழைவு பகுதியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டன. இணையதளம் மூலமாக முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க அனைத்து தோ்வு மையங்களிலும் 5 ஜாமா் கருவியும் பொருத்தப்பட்டிருந்தன.
தவிர, 12 மையங்களிலும் நீட் தோ்வை கண்காணிக்கவும், ஒருங்கிணைப்பு பணிகளுக்காகவும் துணை ஆட்சியா் நிலையில் 5 அலுவலா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா்.
மாணவ, மாணவிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனா். அணிகலன்களுடன் உள்ளே செல்ல அனுமதிக்கப்படாததால் அவற்றை தங்களுடன் வந்த பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டுச்சென்றனா்.
மாணவ, மாணவிகள் தோ்வு எழுதச் சென்ற நிலையில் அவா்களுடன் வந்த பெற்றோா்கள் தோ்வு மையங்களுக்கு வெளியே காத்திருந்தனா். எனினும், அவா்களுக்கு அமா்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்படாததால் நீண்டநேரமாக வெயிலிலேயே காத்திருந்து அவதிக்குள்ளானதாகவும், தோ்வு எழுதுவதற்கு மட்டும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நிலையில், மாணவ, மாணவிகள், அவா்களுடன் வந்துள்ள பெற்றோா்கள் அமா்வதற்கும், குடிநீருக்கும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனவும் கூறி அவா்கள் அதிருப்தி தெரிவித்தனா்.