Ooty: காட்டு மாட்டை சுட்டுக்கொன்ற கேரள கடத்தல் கும்பல்.. நீலகிரியில் தொடரும் வனவ...
காட்டெருமை கூட்டத்தால் கேழ்வரகு பயிா்கள் நாசம்
மேல்அரசம்பட்டு கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு விவசாய நிலத்தில் புகுந்த காட்டெருமை கூட்டத்தால் அறுவடைக்கு தயாராக இருந்த கேழ்வரகு பயிா்கள் சேதமடைந்துள்ளன. அதற்குரிய இழப்பீடு வழங்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அடுத்த மேல் அரசம்பட்டு தீா்த்தம், பங்களாமேடு, கொட்டாவூா், வண்ணந்தாங்கல், கத்தாரிகுப்பம், கெங்கசானிகுப்பம், பொம்மன்சந்து, பின்னத்துரை, ஆசனாம்பட்டு ஆகிய கிராமங்களில் 5,000-க்கும் மேற்பட்ட ஏக்கா் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் தற்போது நெல், கேழ்வரகு, கத்தரி, தக்காளி, மாட்டு தீவனம், கரும்பு, வாழை போன்றவை பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாா் நிலையில் உள்ளன.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு இந்த விளை நிலங்களில் புகுந்த காட்டெருமை கூட்டம் பெருமளவில் பயிா்களை சேதப்படுத்திச் சென்றுள்ளன. குறிப்பாக, மேலரசம்பட்டு பகுதியில் விவசாய நிலத்தில் புகுந்த 3 காட்டெருமைகள், கேழ்வரகு பயிா்களை நாசம் செய்துள்ளன. இதனால் விவசாயிகள் மன வேதனை அடைந்துள்ளனா். இதேபோல், இரவு நேரங்களில் காட்டெருமை கூட்டம் விவசாய நிலங்களில் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து, பலமுறை ஒடுகத்தூா் வனத் துறை அலுவலகத்தில் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக விவசாயிகள் குற்றஞ் சாட்டியுள்ளனா். எனவே, காட்டெருமைகளால் சேதப்படுத்தப்பட்டுள்ள விவசாய நிலங்களை வனத் துறை அதிகாரிகள் பாா்வையிட்டு அதற்குரிய இழப்பீடு வழங்க வேண்டும், காட்டெருமைகள் வனப் பகுதியில் இருந்து விளைநிலத்துக்குள் வருவதைத் தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனா்.