`நீதிமன்றங்களில் அனைத்து பாலருக்குமான கழிவறை வசதியை மேம்படுத்துங்கள்!' - உச்ச நீதிமன்றம் உத்தரவு
இந்தியா முழுவதுமுள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்கள் மற்றும் தீர்ப்பாயங்களில் ஆண், பெண், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் அடிப்படைத் தேவையான `கழிப்பறை'கள் தனித்தனியாய் இருத்தல் வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
"கழிவறைகள் வெறும் வசதிக்கான விஷயம் அல்ல, மனித உரிமைகளின் அம்சமான அடிப்படைத் தேவை. வாழ்வுரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ், அனைவருக்கும் சிறந்த சுகாதாரத்திற்கான அணுகலை உறுதி செய்வது அடிப்படை உரிமையாக உள்ளது. அரசியலமைப்பின் நான்காம் பகுதியின் கீழ், ஆரோக்கியமான சூழலை உறுதி செய்யவும் பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தவும் ஒவ்வொரு மாநிலத்திற்கும், யூனியன் பிரதேசத்திற்கும் கடமை உள்ளது" என நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் அடங்கிய பெஞ்ச் கூறியுள்ளது.
``போதுமான கழிவறை வசதிகள் இல்லாதது, சமத்துவ குறைபாட்டுக்கு உட்பட்டது மற்றும் நியாயமான நீதி நிர்வாகத்திற்கு இது தடையாக உள்ளது. எனவே, அனைத்து பாலினத்தவர்களுக்கும்... மாற்றுத்திறனாளிகளுக்கும் தனித்தனியாய் கழிவறை வைத்தல் அவசியம்" எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. திருநங்கைகளுக்குத் தனியாகக் கழிப்பறை அமைப்பதற்கான உத்தரவை முதன்முறையாக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
``அனைத்து பாலினத்தவர்களுக்கும் தனித்தனி கழிவறைகள், சானிட்டரி நாப்கின் டிஸ்பென்சர்கள், பார்வை குறைபாடுள்ளோருக்கான தொட்டுணரக்கூடிய நடைபாதைகள் மற்றும் சக்கர நாற்காலி பயன்படுத்துவோருக்கான சாய்வு தளங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளோடு அனைத்து பாலினத்தவர்களுக்கும் தனித்தனி கழிவறைகள் கட்டுவது கடமை" என மாநில அரசுகளுக்கும், உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலூட்டும் தாய்மார்களுக்கான வசதி மற்றும் டயப்பர் மாற்றும் வசதிகளோடு, பெண்கள் கழிப்பறையில் பாலூட்டும் தாய்மார்களுக்கென தனி அறைகள் கட்டவும் வழிமுறைகள் தரப்பட்டுள்ளது.
கழிவறைக்கான வசதிகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்த மற்றும் மேற்பார்வையிட அனைத்து நீதிமன்றங்களுக்கும் தனியாகக் குழுக்கள் அமைக்க இந்த நீதிமன்ற பெஞ்ச் உத்தரவிட்டது.
தீர்ப்பின் உத்தரவை அனைத்து உயர் நீதிமன்றங்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களிடம் கடுமையாகச் செயல்படுத்துமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இவ்வழக்கின் அவசரத்தைக் கருதி, நான்கு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து உயர் நீதிமன்றத்துக்கும் மாநில அரசுகளுக்கும் பெஞ்ச் அறிவுறுத்தியுள்ளது.