மகா கும்பமேளா: முதல் 6 நாளில் 7 கோடி பக்தா்கள் புனித நீராடல்
`ஒரு கோடி ரூபாய் நிலத்துக்கு, இழப்பீடு வெறும் இரண்டு லட்சம்!' - ஏமாற்றப் பார்த்த அரசாங்கம்...
- தூரன்நம்பி
நம்மிடம் உங்களிடம் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கிய ஒருவர், ஒரு பைசாகூட கொடுக் காமல் இழுத்தடித்து, இன்றைக்குத்தான் பணம் கொடுக்கிறார். ஆனால், நிலத்தை வாங்கிய அன்றைய தேதியில் அந்த நிலத்துக்கு என்ன மதிப்போ... அந்தத் தொகையை மட்டுமே இன்றைய தேதியில் கொடுக்கிறார். நீங்கள் வாங்கிக் கொள்வீர்களா? ஆனால், அதைத்தான் கொடுக்கமுடியும் என்று திமிர் பேசுகிறார், அந்த சார். அந்த சார் வேறு யாருமல்ல... அரசாங்கம்தான். ஆம்... தேசிய நெடுஞ்சாலைக்காக விவசாயிகளிடமிருந்து நிலங்களைக் கையகப்படுத்திய கர்நாடக அரசு, இத்தகைய அநீதியைத்தான் செய்து கொண்டிருக்கிறது.
நிவாரணம் தேடி ஓடிவந்த விவசாயி களை கர்நாடக உயர் நீதிமன்றமும் கைவிட்டது. ஆனால், `கையகப்படுத்தப் பட்ட நிலத்துக்கு தற்போதைய சந்தை மதிப்பில் பணத்தை வழங்க வேண்டும்' என்று அதிரடி காட்டி, விவசாயிகளுக்கு ஆறுதல் கொடுத்துள்ளது உச்ச நீதிமன்றம்.
`அரசியலமைப்பின் 300-A பிரிவின் கீழ் சொத்துரிமை என்பது அரசியல் சாசன உரிமை. சட்டப்படி உரிய இழப்பீடு வழங்காமல் தனிநபரின் சொத்தை எடுத்துக் கொள்ள முடியாது' என்றும் உச்ச நீதிமன்றம் அடிக்கோடிட்டுள்ளது. இந்தியாவில் அரசு இயந்திரங்களால் விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்படும்போது அவர்கள் எந்தளவுக்கு வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதற்கு, இந்த வழக்கு ஓர் எடுத்துக்காட்டே.
பெங்களூரு - மைசூரு உயர்மட்ட தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்காக (Bangalore Mysore Infrastructure Corridor Project) 6,000 ஏக்கர் நிலத்தில் ஆறு வழி உயர்மட்ட சாலை மற்றும் நான்கு வழி சர்வீஸ் சாலை (மொத்தம் பத்து வழிச்சாலை) உருவாக்க, கர்நாடக தொழில் மேம்பாட்டு சட்டத்தின் கீழ் (Karnataka Industrial Development Act) கர்நாடக அரசு, பெங்களூரு தெற்கு தாலுகாவில் உள்ள கோட்டிகெரே கிராமத்தின் நிலத்தை 2003-ல் கையகப்படுத்தியது. ஆனால், நிலத் தின் உரிமையாளர்களுக்கான இழப்பீட்டை வழங்காமல் இழுத்தடித்தது.
அரசிடம் பல முறை கோரிக்கை வைத்து சோர்ந்துபோன நில உரிமையாளர்கள், `எவ்வளவு நிலம் எங்களிடமிருந்து எடுக்கப்பட்டதோ அதே அளவுக்குக் குடியிருப்பு மனைகளாக எங்களுக்கு வழங்க வேண்டும்’ என்று கோரி 2009-ல் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். `இழந்த நிலத்துக்கு ஈடாக மாற்று நிலம் கொடுக்க வேண்டும் என்று எந்த சட்டமும் கூறவில்லை’ எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்துவிட்டது நீதிமன்றம். ஆனால், நிலம் கையகப்படுத்தப்பட்டபோது, மாற்று நிலம் கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்கள் அதிகாரிகள்.
நிலம் இழந்தவர்கள், 2017-ல் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மீண்டும் தொடுத்த வழக்கில், `இழப்பீடு மற்றும் குடியிருப்பு மனை குறித்து விசாரித்து, நில உரிமையாளர் களின் கோரிக்கையை மாநில அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்’ என்கிற உத்தரவை மட்டும் பிறப்பித்துவிட்டு, ஒதுங்கிக்கொண்டது நீதிமன்றம். ஆனால், அதன் பிறகும் மாநில அரசு எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை.
மாநில அரசு மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தார்கள் நில உரிமையாளர்கள். இதற்கிடையில், 2019-ல் சிறப்பு நிலம் கையகப்படுத்தப்படும் அதிகாரியை (Special Land Acquisition Officer- SLAO) நியமனம் செய்து, 2009-ம் ஆண்டு மதிப்பீட்டின்படி இழப்பீடு கொடுக்க உத்தர விட்டது, மனசாட்சியே இல்லாத கர்நாடக மாநில அரசு. ஆனால், அந்த சிறப்பு அதிகாரி போட்ட மதிப்பீட்டையும்கூட அரசு ஏற்க வில்லை என்பதுதான் கொடுமை. `பின் தேதியிட்டு பணப்பட்டுவாடா செய்ய சட்டத்தில் இடமில்லை' என்று மாநில அரசு கூற, கொதித்து எழுந்த நில உரிமையாளர்கள், `இன்றைய சந்தை விலையில்தான் இழப்பீடு கொடுக்க வேண்டும்’ என்றார்கள்.
2022-ல் கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு மீண்டும் வழக்கு சென்றது. `புதிய உத்தரவு போட்டு நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். ஆனால், எதுவும் நடக்கவில்லை. ‘கர்நாடக அரசு அலுவலகங்களுக்கும் கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கும் நடந்து நடந்து எங்கள் கால்கள் தேய்ந்துவிட்டன’ என்று கண்ணீர்விட்ட நில உரிமையாளர்கள், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்கள். இவ்வழக்கில்தான் சாட்டையைச் சொடுக்கியுள்ளனர் உச்ச நீதிமன்ற நீதிபதி களான பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விசுவ நாதன். கூடவே, கர்நாடக அரசையும் கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள்.
`2003-ல் நிலத்தின் மதிப்பு என்ன? 2023-ல் நிலத்தின் மதிப்பு என்ன? இரண்டும் ஒன்றா? 2003-ல் பணத்தின் வாங்கும் சக்தியும்2023-ல் பணத்தின் வாங்கும் சக்தியும் ஒன்றா? உங்களுக்கு அறிவு இருக்கிறதா? 2003 மதிப்பீட்டின்படி இன்று இழப்பீடு கொடுத்தால், அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு நில உரிமையாளர்களால் எப்படி வாழ முடியுமா? உரிய காலத்தில் உரிய இழப்பீடு கொடுத்திருந்தால் அவர்கள் அந்த முதலீட்டை வைத்து ஏதாவது தொழில் அல்லது முதலீடு செய்திருப்பார்கள். அதன் மூலம் வரும் வருமானம் அவர்களின் வாழ் வாதாரத்தைப் பெருக்கி இருக்கும். அவர்களை நடுத்தெருவில் நிறுத்தி விட்டீர்கள். எனவே, இன்றைய சந்தை மதிப்பீட்டின்படி அவர் களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்’ என்று அதிரடி தீர்ப்பளித்திருக்கிறார்கள்.
உச்ச நீதிமன்றம், இந்திய அரசியலமைப்பின் 142-வது பிரிவின் கீழ் தன்னுடைய தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, நெடுஞ்சாலைத்துறைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்காக வழங்கியிருக்கும் இந்தத் தீர்ப்பு வரவேற்கப்படவேண்டியதே. ஆனால், இவ்வழக்கில் நீதிபதிகள் கையாண்டிருக்க வேண்டியது... 2013-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைத்தான். சந்தை விலையைவிட நான்கு மடங்கு கூடுதலாக விலை வைத்து நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்று வரையறுக்கிறது இச்சட்டம்.
`நாங்கள் அரசிடம் இழந்திருப்பது காவிரி பாயும் செழிப்பான விவசாய நிலங்களை. 2003-ம் ஆண்டில் இங்கே ஒரு ஏக்கர் நிலத்தின் மதிப்பு இரண்டு, மூன்று லட்சம் ரூபாய்தான். இன்றோ ஒரு கோடியிலிருந்து நான்கு கோடி ரூபாய் வரை போகிறது. எனவே, 2013-ம் ஆண்டு சட்டத்தின்படிதான் இழப்பீடு கொடுக்க வேண்டும்' என்று இப்போதும் குரல் கொடுத்தபடி உள்ளானார் விவசாயிகள். கர்நாடக அரசோ மௌனம் சாதித்து வருகிறது. சரி, உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவையாவது கர்நாடக அரசு நிறைவேற்றுமா... அதுவும் எந்தளவுக்கு நிறைவேற்றும் என்பது ஆள்வோருக்கே வெளிச்சம்.
இது ஒருபுறமிருக்க, இதே தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் அமைக்கப்படும் நந்தி டவுன்ஷிப்புக்காக, இதே காலகட்டத்தில் 27 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அதிலும் அத்தனை அரசியல்வாதிகளும் உள்ளே புகுந்து `தில்லாங்கடி வேலை'களை செய்துள்ளனர். அந்தக் கொடுமைகளை பிறகு பார்ப்போம். ஆனால், அந்த நிலங்களுக்கும் உரிய விலை இன்னமும் கிடைக்கவில்லை. அதைக் கொடுக்கப்போவது யார்? அதற்காகவும் நீதிமன்றப் படிகளில் விவசாயிகள் ஏறத்தான் வேண்டுமா?
ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு கட்சியுமே `நாங்கள்தான் விவசாயத் தோழன்' என்கின் றன. ஆனால், கர்நாடகாவில் காங்கிரஸ், பா.ஜ.க, மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மூன்று கட்சிகளுமே மாறிமாறி இந்த 20 ஆண்டுகளில் ஆட்சி நடத்தியுள்ளன. ஆனால், மூன்று கட்சிகளுமே விவசாயிகளின் நிலங்களைப் பறித்துக்கொண்டு, உரிய விலையைக் கொடுக்காமல்தான் இருந் துள்ளன. இது, கர்நாடகாவில் மட்டும் நடக்கும் பிரச்னை இல்லை. தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் இதே அரச அட்டூழியங்கள்தான் நடக்கின்றன. இதற்கு இந்தக் கட்சி... அந்தக் கட்சி என்கிற எந்த வேறுபாடும் இல்லை. அத்தனை கட்சிகளுமே எதிரிக்கட்சிகள்தான், விவசாயிகளுக்கு!