நீரழிவு நோய் வரக் காரணம் என்ன? வெள்ளை உணவுகள் எல்லாம் உடலுக்குக் கெடுதலா? - மருத்துவர் பதில்!
ஆயுர்வேதம், பொதுவாக இந்த வார்த்தையைக் கேள்விப்பட்டாலே நம் எல்லாருடைய மனதிலும் வரக்கூடிய ஒரு எண்ணம் கஷாயங்கள், கசப்பான மருந்துகள், பத்தியங்கள்.
ஆயுர்வேதம் என்றால் 'தடுப்பு, சிகிச்சை, புத்துணர்ச்சி' என்று சொல்லக்கூடிய மூன்று நல்ல விஷயங்களை ஒருங்கிணைத்து ஆரோக்கிய வாழ்க்கைக்கு நமக்கு உதவி செய்யக்கூடிய வழிகாட்டக்கூடிய ஒரு அறிவியல் முறை.
ஆயுர்வேதத்தில் இன்றைக்கு அதிகமாக தடுப்பு முறைகள் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. நோயுற்ற பிறகு அதை தீர்ப்பதற்கான வழிமுறைகளை மட்டும்தான் நாம் பார்க்கிறோம். ஆயுர்வேதம் நம் அனைவருக்கான சிகிச்சை வாழ்வியல் முறை மட்டுமின்றி ஆரோக்கிய வாழ்வியல் முறை. வெறும் உடம்புக்கு மட்டுமல்ல, நம்முடைய மனம், ஆத்மா, இந்த ஜென்மம் நாம் எடுத்து இந்த ஜென்மத்தில் அடைய வேண்டிய விஷயங்களை அது பணமானாலும் பொருளானாலும் படிப்பானாலும் எல்லாத்துக்கும் தேவையான வழிமுறைகளை சொல்லிக் கொடுக்கக்கூடிய ஒரு அறிவியல் முறைதான் ஆயுர்வேதம்.
எல்லோரும் ஒரு முதல் நிலை நோயுடன் இன்றைக்கு மருத்துவரை போய் பார்க்கிறோம் உதாரணத்துக்கு இன்றைக்கு சர்க்கரை நோயை எடுத்துக்கொள்ளகலாம். ரத்த பரிசோதனைகள் உள்ளிட்ட நிறைய பரிசோதனைகள் செய்து முதல் நிலை மாத்திரைகள் நமக்கு கொடுக்கப்படுகிறது.
முதல்முறை மருத்துவரை பார்க்கும்போது இந்த சர்க்கரை நோய் குணப்படுத்த முடியாத நோய், வாழ்நாள் முழுவதும் மருந்துகள் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் 2 ஆண்டுகள் ஆகும்போது ஒரு மாத்திரை 2 மாத்திரையாகவும் பின்னர் 2, 4 ஆகவும் கடைசியில் இன்சுலின் தேவைப்படுகின்ற சர்க்கரை நோயாகவும், சர்க்கரை நோயுடைய இணை துணை நோய்களோடு நிறைய நோய்களோடு போராட வேண்டிய ஒரு வாழ்வியல் முறைக்குள் நாம் போகவேண்டிய ஒரு சூழல் வருகிறது.
இன்றைக்கு 60 வயது இருக்கக்கூடியவர்கள் அனைவருக்கும் இருக்கும் புரிதல் என்னவென்றால் மருந்துகள் மட்டும் வாழ்க்கையுடைய ஆரோக்கியத்தை நிர்ணயிப்பது கிடையாது, மருந்துகளைத் தாண்டி நாம் எடுக்க வேண்டிய முயற்சிகள் எந்த வகையான முயற்சிகளை எடுத்தால் ஆரோக்கியமாக வாழ முடியும் என்ற எண்ண ஓட்டம் இன்றைக்கு பெரும்பாலும் அனைவருக்கும் இருக்கிறது.
அதனால்தான் இன்றைக்கு இருக்கக்கூடிய நவீன மருத்துவ சிகிச்சை சிகிச்சை முறைகள் ஒருபுறம் இருந்தாலும்கூட மற்ற முறைகளை நாம் பின்பற்றும்போது என்ன மாற்றங்கள் நமக்கு கிடைக்கும் என்ற ஒரு புரிதலோடு நோய்களை நாம் அணுக ஆரம்பிக்கிறோம். இயற்கை மருத்துவம் சார்ந்த தேடல் அதிகமாகிக்கொண்டு வருகிறது.
ஒரு 50 ஆண்டுகளுக்கு முன்பு யாராவது உங்களிடம் வந்து நெல்லிக்காயும் மஞ்சளும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய குறிப்பாக சர்க்கரை நோயினால் ஏற்படக்கூடிய நரம்பு நோய்களை கட்டுப்படுத்தக்கூடிய ஒரு அழகான மருந்து என்று சொன்னால் நம்மில் நிறைய பேர் நம்பி இருக்கமாட்டோம். ஆனால் இதே ஆராய்ச்சியை அமெரிக்காவில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களிலும் இந்தியாவில் உள்ள குஜராத் ஆயுர்வேத பல்கலைக்கழகத்திலும் ஆய்வு செய்து ஆய்வு கட்டுரைகளாக இருக்கிறது.
எப்படி நீரிழிவு நோய், நரம்பியல் நோயைத் தடுக்கக்கூடிய மருந்தாக இது இருக்கிறது என்று ஆய்வுகள் சொன்னபிறகு பலரும் இதனை தற்போது கடைப்பிடித்து வருகின்றனர்.
நாம் ஆரோக்கியத்திற்காக எடுக்கக்கூடிய முயற்சி வெறும் மருந்துகள் சார்ந்த முயற்சியாக இல்லாமல் உணவு, நீர், மூச்சுப் பயிற்சி, உடல் சுத்தி, மன சுத்தி, ஆத்ம சுத்தி, அபியாசம் எனும் மனக்கட்டுப்பாடு பயிற்சி, தூக்கம் ஆகியவை மிகவும் அவசியம். இன்றைக்கு உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து மருத்துவராய்ச்சியும் இந்த ஏழு தூண்களை சார்ந்து தான் இருப்பதை பார்க்கிறோம்.
எடுத்துக்காட்டாக இரண்டு வருடங்களுக்கு முன்பாக ஜப்பானில் 2 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு கொடுத்தார்கள். மருத்துவம் சார்ந்து உணவு சாப்பிடாமல் உண்ணா நோன்பு இருக்கும்போது எப்படி அது புற்றுநோயை கொல்லக்கூடியதாக இருக்கிறது என்ற ஆராய்ச்சியின் முடிவுக்காக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆயுர்வேதத்தில் காய்ச்சல் ஆரம்பித்தாலே முதல் சிகிச்சை மருந்து கிடையாது, உண்ணா நோன்பு இருப்பதுதான். இந்த மாதிரியான அடிப்படை விஷயங்களை சொல்லிக்கொடுத்து அது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படும்போது மருத்துவ முறைகள் சார்ந்த அவநம்பிக்கைகள் குறைந்து நம்பிக்கைகள் அதிகமாவதால் இன்று பெரும்பாலும் நூற்றில் குறைந்தது 50 விழுக்காடு மக்கள் இயற்கை மருத்துவத்திற்கு மாறுகிறார்கள்.
நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதோ பூசணிக்காய் சாறு குடிப்பதோ இயற்கை மருத்துவம் கிடையாது. இயற்கை மருத்துவம் என்பது நம் உடல் வாத, பித்த, கபத்தில் எந்த வகையில் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து நம் உடலில் உள்ள நோய்களை அறிந்து, உணவின் மூலமாக, தண்ணீர் குடிப்பதன் மூலமாக, மூச்சுப் பயிற்சி மூலமாக, உடல் கழிவு நீக்கம் மூலமாக, மன அழுத்தத்தை குறைப்பதன் மூலமாக, ஆத்ம ரீதியான எண்ண ஓட்டங்கள் மாறுவதன் மூலமாக என இவை அனைத்தையும் முழுமையான பயிற்சியாகவும் அதுகூடவே தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலமாகவும் மாற்றக்கூடிய முயற்சிதான் இயற்கை மருத்துவம். ஆயுர்வேத மருத்துவம் வெறும் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவது கிடையாது. இந்த புரிதல் சமூக அளவில் பெரிதாக உணரப்பட்டிருப்பதால்தான் நிறைய பேர் குறிப்பாக கரோனா தொற்றுக்குப் பிறகு நம்பி இருந்த ஒரு மருத்துவ முறை குறிப்பிட்ட அளவுக்கு மேல் உதவி செய்ய முடியாத நிலை வந்த பிறகு இயற்கை மருத்துவத்தை நாட ஆரம்பித்து அதன் பலன்களை ஆண்டு அனுபவித்த பின்புதான் இன்று இயற்கை மருத்துவத்தின் மேல் இருக்கக்கூடிய நம்பிக்கை அதை பயன்படுத்துபவர்கள் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிறது.
அரிசி உணவு உடலுக்கு கெடுதல், அதனால் அரிசி உணவைக் குறைத்தால் சர்க்கரை அளவை குறைத்துவிடலாம் என்ற ஒரு தவறான கருத்து உள்ளது. நம் ஊரில் அரிசியை பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். வட இந்தியாவில் கோதுமையை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
இப்போது நம் ஊரில் கோதுமைதான் அதிகம் சாப்பிட வேண்டும் என்று நிறைய மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அப்படியெனில் வட இந்தியாவில் இருப்பவர்களுக்கு சர்க்கரை நோயே இருக்கக்கூடாது. ஆனால் புள்ளி விவரங்களின்படி பார்த்தால் தென் இந்தியாவைவிட வட இந்தியாவில் சர்க்கரை நோய் மிக அதிகமாக இருக்கிறது.
இதையும் படிக்க | அடிக்கடி எமோஜி அனுப்புவது உறவுகளை மேம்படுத்தும்: ஆய்வில் புதிய தகவல்!
பாரம்பரியமாக நாம் அரிசி சமைக்கும்போது, ஒரு பங்கு அரிசிக்கு 4 பங்கு தண்ணீர் வைத்து கொதிக்க வைத்து அரிசி இட்டு வடித்து தேவையற்ற அந்த ஸ்டார்ச்சை நீக்கிவிட்டு சாப்பிடும் நடைமுறை இருந்தது. எப்போது குக்கர் அரிசிக்கு நாம் மாறினோமோ அப்போதுதான் இங்கு சர்க்கரை நோய் பாதிப்புகள் அதிகமானது.
அதேபோல வட இந்தியாவைப் பொருத்தவரை கோதுமையை வாங்கி உலர வைத்து அரைத்து சலித்து அந்த நார்ச்சத்தோடு உபயோகப்படுத்தும்போது எங்கெல்லாம் இன்னும் அந்த பழக்கம் இருக்கிறதோ அங்கு சர்க்கரை நோயின் தாக்கம் குறைவாக இருக்கிறது. இந்த கலாசார ரீதியான புரிதல்கள் என்பது நாம் பார்க்க வேண்டிய ஒன்று.
பால் நல்லதா, கெட்டதா என்று பார்க்கும்போது, வெண்மை நிறமாக இருக்கக்கூடிய உணவுகள் அரிசி, பால், வெள்ளை சர்க்கரை அனைத்துமே உடம்புக்கு கெடுதி என்ற கருத்து உள்ளது.
உண்மை என்னவென்றால் வாதம் சார்ந்த உடல் அமைப்பு கொண்டவர்களுக்கு பாலைவிட சிறந்த உணவு எதுமே கிடையாது. பித்தம் சார்ந்த உடல் அமைப்பு கொண்டவர்களுக்கு பால் ஒத்துக்காது. கபம் உடல் அமைப்பைக் கொண்டவர்கள் உடல் எடை அதிகமாக இருப்பவர்கள். அவர்கள் பால் சாப்பிடக் கூடாது. எந்த விஷயமுமே பொதுப்படையாக இருக்கக் கூடாது என்பதுதான் ஆயுர்வேதத்தின் அடிப்படை கொள்கை.
1 வயதில் இருந்து 32 வயது வரை நாம் கப வயதில் இருக்கிறோம். இந்த வயதில் சளி, இருமல், ஆஸ்துமா, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு சார்ந்த பிரச்னைகள் வரும். 32-82 வரை பித்த வயது என்று சொல்வார்கள். இந்த வயதில் அல்சர் நோய், மூல நோய், பௌத்தர நோய், தோல் நோய்கள், விதவிதமான மன அழுத்தம் சார்ந்த பிரச்னைகள், சர்க்கரை நோய் வரும். 82 - 120 வரை வாத வயது. வாத வயதில் மூட்டு வலி. கழுத்து வலி. நரம்பு நோய்கள். பக்கவாத நோய்கள் வரும். பொதுவாக சராசரி ஆயுட்காலமாக 120 என சொல்கிறது ஆயுர்வேதம்.
ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கக்கூடிய சிகிச்சை என்பது அவர்களுடைய வாத, பித்த, கப அமைப்பைக் கொண்டு செய்ய வேண்டிய விஷயம், அது பொதுப்படையாக இருக்கக் கூடாது.
வீட்டில் அந்த காலத்தில் ஒரு கூட்டு, ஒரு அவியல், ஒரு மசியல் என விதவிதமான உணவுகள் வைத்திருப்பார்கள். அறுசுவை உணவு என்பது அந்த காலத்தில் தமிழனின் கலாசாரம். நாம் சாப்பிட ஆரம்பிக்கும்போது இனிப்பு அல்லது உப்பில் ஆரம்பித்து இனிப்பில் முடியும். இதனால் ஜீரண நோய்கள் எதுவும் ஏற்படாது.
பாக்கெட்டில் வரக்கூடிய எண்ணெய் நல்லதா, செக்கு எண்ணெய் நல்லதா எனக் கேட்டால் நான் பாக்கெட் எண்ணெய் என்றுதான் சொல்வேன். அந்த காலத்தில் எண்ணெய்யை செக்கில் ஆட்டினால் அந்த எண்ணெயை துணியில் கட்டி வெயில் வைப்பார்கள். ஒரு வார காலம் அது வெயிலில் இருக்கும். அப்போதே ஒரு லிட்டர் 900 மில்லியாகக் குறைந்து அந்த எண்ணையின் அடிப்பகுதியில் வழவழவென்று வெண்மை நிறத்தில் ஒரு திரவம் காணப்படும். அந்த வெண்மை நிறமான திரவத்தை விளக்கேற்றும் எண்ணெயாக பயன்படுத்திவிட்டு மேலே உள்ள எண்ணெயை மட்டும் வடித்து சமையலுக்கு பயன்படுத்துவார்கள்.
அந்த வழவழப்புத் தன்மையுள்ள எண்ணெயை நாம் பயன்படுத்தும்போது நமக்கு வயிறு உபாதைகள், ஈரல் நோய்கள், தோல் நோய்கள் என பல பிரச்னைகள் வரும். ரீபைன்டு ஆயிலில் அந்த மாதிரி பிரச்னைகள் இருக்காது. அப்புறம் ஏன் இதய நோயும் மற்ற பிரச்னைகள் உருவாகின்றன? எண்ணெய் பயன்படுத்தும் அளவை நாம் மறந்துவிட்டோம்.
ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 8 மிலி அளவுக்கு மேல் எண்ணெய் தேவையில்லை. ஆனால் 4 பேர் இருக்கும் வீட்டில் ஒரு நாளைக்கு 32 மிலி என்றால் ஒரு மாதத்திற்கு ஒரு லிட்டருக்கு மேல் எண்ணெய் தேவையில்லை. ஆனால் மாதத்திற்கு இன்று குறைந்தது 3 லிட்டர் எண்ணெய் பயன்படுத்துகிறார்கள். எந்த எண்ணெய் என்பது பிரச்னை அல்ல, எந்த அளவுக்கு பயன்படுத்துகிறோம் என்பதுதான் பிரச்னை. அளவுக்கு மீறி பயன்படுத்தும்போது அமிர்தமும் நஞ்சு என்பதுபோல் இன்று நாம் பயன்படுத்தும் வழிமுறைகள் தவறாக இருப்பதே பல நோய்கள் வரக் காரணமாகிறது.