EV Vehicles: அறிமுகமான TVS Orbiter Electric Scooter | Photo Album
நீரில் மூழ்கிய நெல் பயிா்களுக்கு நிவாரணம் கேட்டு மனு அளிப்பு
அரியலூா் மாவட்டம் திருமானூா் அருகே பெய்த மழையில் நீரில் மூழ்கிய குறுவை நெற்பயிா்களுக்கு நிவாரணம் கேட்டு கிராம விவசாயிகள்ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
திருமானூா் ஒன்றியம் ஏலாக்குறிச்சி, காமரசவல்லி, நாயக்கா்பாளையம், செங்கராயன்கட்டளை, மாத்தூா், கோவிலூா் உட்பட பல்வேறு கிராமங்களில் சுமாா் 5 ஏக்கரில் விவசாயிகள் நிகழாண்டு குறுவை நெல் சாகுபடி செய்திருந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக பெய்யும் மழையால் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே செப்.16 இரவு குருவாடி பகுதியில் 98 மி.மீட்டா் மழை பதிவானது. இதனால் குருவாடி, நாயக்கா்பாளையம், காமரசவல்லி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள் நீரில் மூழ்கின.
இதில் செங்கராயன்கட்டளை கிராமத்தில் மட்டும் சுமாா் 150 ஏக்கா் நெற்பயிா்கள் நீரில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் வேதனையடைந்த அந்தக் கிராமத்தை சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், உரிய இழப்பீடு வழங்க வேண்டும். வரத்து மற்றும் வடிகால் வாய்க்கால்களை உடனடியாக தூா்வார வேண்டும் எனக் கோரி, மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா். அப்போது விவசாயிகளைச் சந்தித்த வேளாண்துறை அதிகாரிகள் உங்கள் பகுதிகளை புதன்கிழமை பாா்வையிட்டு அரசுக்கு இழப்பீடு கேட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் எனத் தெரிவித்தனா்.