தொழிற்கல்விப் படிப்புகளில் அருந்ததியா் மாணவா்கள் அதிகம் பயன்: அமைச்சா் மா.மதிவே...
நீலகிரி: தொழிலாளரின் உடலை டிராக்டரில் அனுப்பிய தேயிலைத் தோட்ட நிர்வாகம்; கொதிப்பில் தொழிலாளர்கள்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகில் உள்ள அத்தி மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரி. அந்த பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நிறுவப்பட்டுள்ள பேரி அக்ரோ என்கிற தனியார் தேயிலைத் தோட்டத்தில் பல ஆண்டுகளாகக் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்திருக்கிறார்.
உடல்நலக் குறைவு காரணமாகச் சில ஆண்டுகளுக்கு முன்பு பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றிருக்கிறார். சுந்தரியின் கணவர் ரவி என்பவர் அதே தோட்ட நிறுவனத்தில் நிரந்தர கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். நிறுவனம் தரப்பில் கூலித் தொழிலாளர்களுக்குக் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கும் லைன்ஸ் எனப்படும் குடியிருப்பில் இந்த தம்பதி வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சுந்தரிக்குத் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. மோங்கோ ரேஞ்ச் பகுதியில் செயல்பட்டு வரும் தோட்ட மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். சிகிச்சை பலனின்றி 2 தினங்களுக்கு முன்பு பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார் சுந்தரி. இறந்தவரின் உடலைத் தேயிலை மூட்டைகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படும் டிராக்டரில் ஏற்றிக் குடியிருப்புக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த அதிர்ச்சி குறித்துத் தெரிவித்த தோட்டத் தொழிலாளர்கள், "நீலகிரியில் உள்ள சில தனியார் மற்றும் அரசு பெருந்தோட்டங்களில் உழைக்கும் தொழிலாளர்களின் நிலைமை கொத்தடிமைகளை விட மோசமான நிலையில் இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு நடுக்காட்டில் கட்டப்பட்ட பாழடைந்த குடியிருப்புகள், யானை, புலி, அட்டைக் கடிக்கு மத்தியில் வேலை எனக் காலங்காலமாகக் கொடுமையான துயரத்தை மட்டுமே எதிர்கொண்டு வருகிறோம். தேயிலை செடிகளுக்கு உடலை உரமாக்கி காலம் முழுவதும் உழைத்துக் கொடுத்த எங்களின் உடலுக்குக் கூட அடிப்படை மரியாதை கிடையாது. இறந்த விலங்கினங்களின் உடலைப் போல் லோடு டிராக்டரில் அனுப்புகிறார்கள்.
தோட்ட நிர்வாகத்திடம் ஆம்புலன்ஸ் இருக்கிறது. ஆனாலும், எங்களுக்காக இயக்குவதில்லை. தோட்டத் தொழிலாளர்கள் நிறைந்த இந்த மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறை என ஒன்று இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது. சடலத்தையும் உறவினர்களையும் நடுங்க வைக்கும் குளிரில் திறந்தநிலை டிராக்டரில் அனுப்பும் இந்த அவலம் குறித்து அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறோம்" என்றனர்.
இது குறித்துத் தெரிவித்துள்ள கூடலூர் வருவாய்க் கோட்டாட்சியர் செந்தில் குமார், "இது தொடர்பாகப் புகார்கள் வந்திருக்கின்றன. உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs