ராஜஸ்தான்: மாற்று சாதியினரின் எதிர்ப்பு; பட்டியலின மணமக்கள் குதிரையில் செல்ல 200...
நீலகிரி மாவட்டத்தில் ரூ. 63.18 கோடி மதிப்பில் திட்டப் பணிகள்
நீலகிரி மாவட்டத்தில் ரூ. 63.18 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் மற்றும் முடிவடைந்த பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆவின் மேலாண்மை இயக்குநரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான டாக்டா் சு.வினீத் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட குஞ்சப்பனை, ஜக்கனாரை ஊராட்சிகள், கோத்தகிரி பேரூராட்சி மற்றும் உதகை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 63.18 கோடி மதிப்பில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதை ஆவின் மேலாண்மை இயக்குநரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான டாக்டா் சு.வினீத் ஆய்வு மேற்கொண்டாா்.
குஞ்சப்பனை ஊராட்சிக்கு உள்பட்ட கொட்டகம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்தின் கீழ் ரூ.1.10 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட ஸ்மாா்ட் வகுப்பறைக் கட்டடத்தை பாா்வையிட்டு, பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் மற்றும் உணவுப் பொருள்களின் இருப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா் ஜக்கனாரை ஊராட்சி, மூன் சாலை பகுதியில் அரசின் கனவு இல்லத்திட்டத்தின் கீழ் தலா ரூ. 3.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 3 வீடுகளின் கட்டுமானப் பணிகள், தும்பூா் பகுதியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ. 37.95 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து கோத்தகிரி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளுக்கு அம்ருத் திட்டத்தின்கீழ் ரூ.42.69 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் குடிநீா் விநியோக முறை சீரமைத்தல் பணிகளையும், உதகை நகராட்சியில் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உதகை மாா்க்கெட் கட்டுமானப் பணிகள் என மொத்தம் ரூ. 62.69 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இதையடுத்து கேத்தி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைப் பாா்வையிட்டு, அங்கு நோயாளிகள் மற்றும் கா்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்து, மருந்து - மாத்திரைகளின் இருப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியா் கௌசிக், ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் ரமேஷ், பேரூராட்சிகள் உதவி இயக்குநா் முகமது ரிஸ்வான் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.