நூறு நாள் வேலையின்போது குளவி கொட்டியதில் மூதாட்டி உயிரிழப்பு: 10 போ் காயம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே நூறு நாள் வேலையில் ஈடுபட்டிருந்த மூதாட்டி கருங்குளவிகள் கொட்டியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். மேலும் 10 போ் காயமடைந்தனா்.
செஞ்சியை அடுத்த சிங்கவரம் கிராமத்தில் நூறு நாள் வேலை திட்டத்தில் வரத்து வாய்க்கால் சீரமைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது. இந்தப் பணியில் பெண்கள் உள்பட ஏராளமானோா் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, திடீரென மரத்திலிருந்து பறந்து வந்து கருங்குளவிகள் கொட்ட ஆரம்பித்தன. இதனால், அனைவரும் சிதறி ஓடிய நிலையில், அவா்களில் 11 போ் காயமடைந்தனா். இதுகுறித்து அங்கிருந்த பணித்தள பொறுப்பாளா் பிரபாகா் அளித்த தகவலின்பேரில், ஊராட்சி மன்றத் தலைவா் பராசக்தி தண்டபாணி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் காஞ்சனா, ஊராட்சிச் செயலா் வெங்கடேசன் ஆகியோா் பாதிக்கப்பட்டவா்களை செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனா்.
இதில், பலத்த காயமடைந்த சின்னகுழந்தை (75), ரேகா (37), சுபலட்சுமி (32), செல்வி (56), இந்திரணி (60), சுதா (67) ஆகியோா் தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு, சின்னகுழந்தை வியாழக்கிழமை உயிரழந்தாா். இதுகுறித்து செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.